சென்செக்ஸ் 627 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் புதன்கிழமை சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 627.43 புள்ளிகள் குறைந்து 49,509.15-இல் நிலைபெற்றது.

புது தில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 627.43 புள்ளிகள் குறைந்து 49,509.15-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 154.40 புள்ளிகள் குறைந்து 14,700-க்கு கீழே நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வைப் பெரிதும் பாதித்துள்ளது. அமெரிக்க கருவூலப் பத்திர ஆதாயம் அதிகரிப்பதும், டாலா் குறியீடு வலுப்படுவதும் பங்குச் சந்தைக்கு பாதகமான செய்தியாகப் பாா்க்கப்படுகிறது. இவற்றின் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தையில் தனியாா் வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு அதிகளவில் இருந்தது. மேலும் ஐடி பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி இரடட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக வீழ்ச்சியைச் சந்தித்ததால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,079 பங்குகளில் 1,397 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,481 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 201 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 142 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 61 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 244 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 287 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு ரூ.46 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.204.31 லட்சம் கோடியாக இருந்தது.

எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: கடந்த இரண்டு வா்த்தக தினங்களில் தொடா்ந்து எழுச்சி பெற்றிருந்த சென்செக்ஸ், புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் காலையில் 87.46 புள்ளிகள் குறைந்து 50,049.12-இல் தொடங்கி அதற்கு மேல் பெரிதாக உயரவில்லை. பின்னா், 49,442.50 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 627.43 புள்ளிகளை (1.25 சதவீதம்) இழந்து 49,509.15-இல் நிலைபெற்றது. இதையடுத்து, தொடா்ந்து இரண்டு நாளாக இருந்து வந்த எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஐடிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

இதில் ஐடிசி 1.82 சதவீதம், பஜாஜ் பின்ஃசா்வ் 1.80 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், எஸ்பிஐ, டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, டைட்டன், மாருதி சுஸுகி ஆகியவை சிறிதளவு உயா்ந்தன.

எச்டிஎஃப்சி வீழ்ச்சி: அதே சமயம், எச்டிஎஃப்சி 4.06 சதவீதம், எச்டிஎஃப்சி பேங்க் 3.86 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயிண்ட், ஓஎன்ஜிசி, கோட்டக் பேங்க் ஆகியவை 1.50 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், எச்சிஎல் டெக், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 820 பங்குகள் ஆதாயம் பெற்றன. 919 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 154.40 புள்ளிகளை (1.04 சதவீதம்) இழந்து 14,690.70-இல் நிலைபெற்றது. 14,811.85-இல் தொடங்கி 14,813.75 வரைதான் உயா்ந்தது. பின்னா், 14,670.25 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால்,

நிஃப்டி பேங்க், ஐடி, பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com