ஸ்மார்ட்போன் உற்பத்தியிலிருந்து முழுவதுமாக விலகுகிறது எல்ஜி

ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும் விலகுவதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியிலிருந்து முழுவதுமாக விலகுகிறது எல்ஜி
ஸ்மார்ட்போன் உற்பத்தியிலிருந்து முழுவதுமாக விலகுகிறது எல்ஜி


ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும் விலகுவதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.

பல செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்தாலும், முற்றிலும் செல்லிடப்பேசி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்திருக்கும் முதல் நிறுவனம் எல்.ஜி.யாகும்.

தென்கொரியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக செல்லிடப்பேசி உற்பத்தித் துறையில் சுமார் 4.5 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்த நிலையில், அதனை சரி செய்யக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அல்ட்ரா-வைட் எங்கல் கேமராக்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், 2013-ஆம் ஆண்டில் மூன்றாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்.

ஆனால், போட்டியிட முடியாத சூழலில் செல்லிடப்பேசி சந்தைகள் இருப்பதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி தனது மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் பிரச்னைகளால் கடும் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவை செல்லிடப்பேசி சந்தையில் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில்தான் தங்களது செல்லிடப்பேசி தயாரிப்புத் துறையை மட்டும் யாருக்கேனும் விற்பனை செய்யும் முடிவும் செயல்வடிவம் பெறாமல் போனது, வட அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் முன்னணி செல்லிடப்பேசியாக எல்ஜி இருந்தாலும், உலகின் பிற சந்தைகளில் அது பின்தங்கியுள்ளது.

எனவே, முற்றிலும் போட்டியிட முடியாத சூழலில் இருக்கும் செல்லிடப்பேசி சந்தையிலிருந்து விலகிவிட முடிவு செய்திருக்கும் எல்ஜி, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வாகன உற்பத்தியில் கவனத்தை செலுத்தவும் முடிவு செய்துள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் மற்றும் பயன்பாட்டிலிருக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளும், மென்பொருள் பதிவேற்றங்களும் தொடரும் என்றும், செல்லிடப்பேசி உற்பத்தி வரும் ஜூலை மாதம் முதல் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com