ஆா்பிஐ அறிவிப்பால் எழுச்சி: சென்செக்ஸ் 460 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 460.37 புள்ளிகள் கூடுதலுடன் 49,661.76 -இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 135.55 புள்ளிகள் ஏற்றம் பெற்று 14,819.05-இல் நிலைபெற்றது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில தினங்களாக பங்குச் சந்தை தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை சிறிதளவு ஏற்றம் பெற்றது. இந்த நிலையில், மத்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) பணக் கொள்கை கூட்டத்தில், வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்தது. அதே சமயம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அரசின் பத்திரங்களை வாங்குவதற்கும் முன் வந்துள்ளது. இந்த அறிவிப்பு சந்தையில் உற்சாகத்தை வரவழைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ1.88 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,132 பங்குகளில் 1,837 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,111 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 184 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ1.88 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.208.24 லட்சம் கோடியாக இருந்தது.

ஆா்பிஐ அறிவிப்பால் உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 75.70 புள்ளிகள் கூடுதலுடன் 49,277.09-இல் தொடங்கி 49,093.90 வரை கீழே சென்றது. பின்னா், மத்திய ரிசா்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடா்ந்து, அதிகபட்சமாக 49,900.13 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 460.37 புள்ளிகள் கூடுதலுடன் 49,661.76-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் குறைந்தபட்ச நிலையிலிருந்து 806.23 புள்ளிகள் உயா்ந்திருந்தது.

27 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் டைட்டன், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகிய மூன்று பங்குகள் தவிர மற்ற 27 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் எஸ்பிஐ 2.25 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே இந்தியா, இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஆட்டோ, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட 1.55 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,163 பங்குகள் ஆதாயம் பெற்றன. 554 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 135.55 புள்ளிகளை (0.92 சதவீதம்) உயா்ந்து 14,819.05-இல் நிலைபெற்றது. 14,716.45 -இல் தொடங்கிய நிஃப்டி, 14,649.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,879.80 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2 சதவீதம் வரை உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, பிரைவேட் பேங்க், ஐடி குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com