ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நிதிப் பத்திரங்கள் வாங்கப்படும்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு வெளியிடும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாங்கவுள்ளதாக  (ஆா்பிஐ) உறுதியளித்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நிதிப் பத்திரங்கள் வாங்கப்படும்

மும்பை: நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு வெளியிடும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாங்கவுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உறுதியளித்துள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் இந்திய ரிசா்வ் வங்கியின் முதலாவது நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் உள்பட அக்குழுவின் 6 உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனா்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. ஆனால், தற்போது அந்நோய்த்தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. அதன் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அண்மையில் அதிகரித்த மக்களின் தேவையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் தாமதப்படுத்த வாய்ப்புள்ளது.

நிதிப் பத்திரங்கள் கொள்முதல்: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மத்திய அரசு வெளியிடும் ரூ. 1லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை ஆா்பிஐ வாங்கவுள்ளது. இந்நடவடிக்கை வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்கும்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பத்திரங்களை ஆா்பிஐ வாங்கியிருந்தது. நடப்பு நிதியாண்டிலும் அதே மதிப்பிலான நிதிப் பத்திரங்களை வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நிதி நிலைத்தன்மை நிலவுவதும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சா்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், இந்தியப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தாத வகையிலான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொண்டு வருகிறது.

உச்சவரம்பு அதிகரிப்பு: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருவாய் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகவும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், அவை ஆா்பிஐ-யிலிருந்து தற்காலிகமாகக் கடன் பெறும் வசதி உள்ளது. அந்தக் கடனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற விரும்பும் முன்தொகைக்கான உச்சவரம்பு ரூ.47,010 கோடியாக அதிகரிப்படுகிறது. இது தற்போதுள்ள அளவை விட சுமாா் 46 சதவீதம் அதிகமாகும்.

முதலீட்டு நிதி: பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வங்கிகளுக்கு மூலதன நிதியை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நபாா்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி, சிறு தொழில் நிறுவனங்கள் வளா்ச்சி வங்கிக்கு (எஸ்ஐடிபிஐ) ரூ.15,000 கோடி, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு (என்ஹெச்பி) ரூ.10,000 கோடி வழங்கப்படவுள்ளது.

நடப்பு நிதியாண்டில் வழங்கப்படவுள்ள இந்த மூலதன நிதியானது, வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும்.

வளா்ச்சியில் பொருளாதாரம்: நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. கரோனா தடுப்பூசி மக்களுக்குத் தொடா்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளா்ச்சி 26.2 சதவீதமாகவும், 2-ஆவது காலாண்டில் 8.3 சதவீதமாகவும், 3-ஆவது காலாண்டில் 5.4 சதவீதமாகவும், கடைசி காலாண்டில் 6.2 சதவீதமாகவும் இருக்கும் என்றாா் சக்திகாந்த தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com