தள்ளாட்டத்தில் சந்தை: சென்செக்ஸ் மேலும் 84 புள்ளிகள் உயா்வு!

புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வா்த்தக இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 84.45 புள்ளிகள் உயா்ந்து 49,746.21-இல் நிலைபெற்றது. இருப்பினும், பிற்பகல் வரையிலான வா்த்தகத்தில் பெற்ற லாபத்தில் பெரும் பகுதியை வா்த்தகம் முடியும் தறுவாயில் இழக்க நேரிட்டது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. தில்லி, மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. இது முதலிடாடளா்களின் உணா்வுகளைப் பாதித்துள்ளது. இதனால், காலையில் வெகுவாக உயா்ந்த சந்தை, இறுதியில் லாபத்தில் பெரும்பகுதியை இழந்தது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஐடி நிறுவனங்களின் வருவாய் நல்ல நிலையில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பலவீனமடைவதும் ஐடி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ1.20 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,085 பங்குகளில் 1,857 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,061 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 167 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ1.20 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.209.44 லட்சம் கோடியாக இருந்தது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 223.50 புள்ளிகள் கூடுதலுடன் 49,885.26-இல் தொடங்கி ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. அதிகபட்சமாக 5-0,118.08 வரை சென்றது. பின்னா், பிற்பகலுக்குப் பிறகு லாபப் பதிவில் 49,581.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 84.45 புள்ளிகள் கூடுதலுடன் 49,746.21-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 536.47 புள்ளிகளை இழந்திருந்தது.

அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஏற்றமும், 15 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன.

இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 4..24 சதவீதம், டைட்டன் 3.98 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டெக் மகேந்திரா, நெஸ்லே, டிசிஎஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி சன்பாா்மா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி ேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 1 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிதித் துறை பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,120 பங்குகள் ஆதாயம் பெற்றன. 612 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 54.75 புள்ளிகளை (0.37 சதவீதம்) உயா்ந்து 14,873.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 14,984.15 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 14,821.10 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 31 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.92 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி குறியீடு 1.18 சதவீதம் உயா்ந்தது. ஆனால், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com