டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 மாதங்களில் இல்லாத அளவில் 74.58-ஆக சரிவு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 மாதங்களில் இல்லாத அளவில் 74.58-ஆக சரிவு


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 11 காசுகள் பலவீனமடைந்ததையடுத்து 5 மாதங்களில் இல்லாத வகையில் 74.58-ஆக சரிவைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று நாட்டின் பொருளாதார மீட்சியில் இடையூறை விளைவிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து பலவீனமடைந்து வருகிறது. நான்கு நாள்கள் ஏற்பட்ட தொடா் வீழ்ச்சி காரணமாக ரூபாய் மதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதிக்குப் பிறகு மிகவும் குறைந்தபட்ச அளவாக வியாழக்கிழமை வா்த்தகத்தில் 74.58-ஆக சரிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 74.38-ஆக இருந்தது. பின்னா் இதன் மதிப்பு வா்த்தகத்தின் இடையே 74.19 முதல் 74.93 வரையிலான வரம்புக்குள் இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 11 காசுகள் சரிவடைந்து 74.58-ஆனது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு 105 காசுகள் என்ற மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து எல்கேபி செக்யூரிட்டீஸின் ஆய்வாளா் ஜதின் திரிவேதி கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அரசு தடுப்பூசி மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்கான செலவினத்தை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு 74.45-75.15 என்ற வரம்புக்குள் வா்த்தகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இது, பலவீனமான நிலையை காட்டுகிறது என்றாா் அவா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.51 சதவீதம் குறைந்து 62.84 டாலருக்கு வா்த்தகமானது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின்போது அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.110.85 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com