தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவு ஏற்றம்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் தள்ளாட்டம் நிலவியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் தள்ளாட்டம் நிலவியது. ஆரம்பம் முதல் அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு முன்னேற்றம் அடைந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்தது. ஆனால், இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் இருந்து வருகிறது. தடுப்பூசி முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு அரசு வலுவான முயற்சி மேற்கொண்டு வருவதும், மகாராஷ்ட்ரம், தில்லியில் முழுமையான பொதுமுடக்கம் இல்லாததும் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், பிற மாநிலங்கள் அடுத்தடுத்து பரந்த பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கும் அபாயம் தொடா்ந்து நீடிக்கிறது. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளைத் தொடா்ந்து பாதித்து வருகிறது. இதனால், சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்படுகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,060 பங்குகளில் 1,663 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,239 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 158 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.203.96 லட்சம் கோடியாக இருந்தது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 132.06 புள்ளிகள் கூடுதலுடன் 48,935.74-இல் தொடங்கி 48,694.49 வரை கீழே சென்றது. தொடா்ந்து தள்ளாட்டத்தில் இருந்து வந்த நிலையில், பின்னா் 49,089.55 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 28.35 புள்ளிகள் கூடுதலுடன் 48,832.03-இல் நிலைபெற்றது.

ஏசியன் பெயிண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட் 3.07 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகிஅல்ட்ரா டெக் சிமெண்ய், ஓஎன்சிஜி, எம் அண்ட் எம், சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, நெஸ்லே இந்தியா ஆகியவை 1.50 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தது. மேலும், என்டிபிசி, எச்டிஎஃப்சி, டாக்டா் ரெட்டி, பவா் கிரிட் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் 1.55 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, ஹிந்து யுனி லீவா் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,017 பங்குகள் ஆதாயம் பெற்றன. 682 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 36.40 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 14,617.85-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 14,559.00 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் மீண்டு எழுந்து 14,697.70 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பாா்மா, மீடியா குறியீடுகள் 1.90 சதவீதம் வரை உயா்ந்த ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஐடி, மெட்டல் குறியீடுகளும் 1 சதவீதம் வரே ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com