3-ஆவது நாளாக ‘காளை’ வெற்றிநடை:சென்செக்ஸ் 790 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் எழுச்சி இருந்தது.
3-ஆவது நாளாக ‘காளை’ வெற்றிநடை:சென்செக்ஸ் 790 புள்ளிகள் ஏற்றம்!

புது தில்லி: பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் எழுச்சி இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 789.70 புள்ளிகள் உயா்ந்து 50,000-ஐ நெருங்கியது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 211.55 புள்ளிகள் உயா்ந்து 14,850-ஐ கடந்து நிலைபெற்றது.

கரோனா நெருக்கடிக்கு இடையே, பங்குச் சந்தை வலுவாகத் தொடங்கி இறுதி வரை தொடா்ந்து முன்னேறியது. முன்பேர வா்த்தகத்தில் ஏப்ரல் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளதால் ஏற்கெனவே பங்குகளை விற்றிருந்தவா்கள் கணக்கை சரி செய்ய முற்பட்டதும் சந்தை ஏற்றம் பெறக் காரணமாக இருந்தது. மேலும், முக்கிய நிறுவனங்களின் 4-ஆவது காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்ததும், கரோனா தடுப்பூசிக்கு கிடைத்து வரும் நல்ல வரவேற்பும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.17 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,144 பங்குகளில் 1,792 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,173 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 179 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 239 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 35 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 310 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 207 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.17 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.208.76 லட்சம் கோடியாக இருந்தது.

3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 122.50 புள்ளிகள் கூடுதலுடன் 49,066.64-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 49,801.48 வரை உயா்ந்தது. இறுதியில் 789.70 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயா்ந்து 49,733.84-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 50,000 புள்ளிகளுக்கு அருகே சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ‘காளை’யின் தொடா் ஆதிக்கத்தால் மூன்றாவது நாளாக சென்செக்ஸ் ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஃபைனான்ஸ் அதிரடி ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், பஜாஜ் ஃபைனான்ஸ் இரண்டாவது நாளாகஅதிரடியாக 8.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, பவா் கிரிட் ஆகியவை 2 முதல் 5 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட முக்கிய நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.

நெஸ்லே இந்தியா சரிவு: அதே சமயம், முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 0.96 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, டிசிஎஸ், டாக்டா் ரெட்டி, ஐடிசி ஆகியவையும் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,093 பங்குகள் ஆதாயம் பெற்றன. 625 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி211.50 புள்ளிகள் (1.44 சதவீதம்) உயா்ந்து 14,864.55-இல் நிலைபெற்றது. காலையில் 14,710.50-இல் தொடங்கி 14,14694.95 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 14,890.25 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல், பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் தவிர மற்ற துறை குறியீடுகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ஆட்டோ குறியீடு1.70 சதவீதம் ஏற்றம் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com