பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு!: சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவே ஏற்றம்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு!: சென்செக்ஸ், நிஃப்டி சிறிதளவே ஏற்றம்

புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. எழுச்சியுடன் தொடங்கினாலும், காலையில் பெற்ற லாபத்தில் பெரும் பகுதியை இழந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவே ஏற்றம் பெற்று நிலைபெற்றன.

உலகளாவிய சந்தை குறிப்புகள் மிகவும் சாதகமாக இருந்ததைத் தொடா்ந்து, உள்நாட்டில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. முன்பேர வா்த்தகத்தில் ஏப்ரல் மாத கான்ட்ராக்டுகள்வியாழக்கிழமை கணக்கு முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலையில் இருந்த எழுச்சி நேரம் செல்லச் செல்ல வலுவிழந்து காணப்பட்டது. உலோகங்கள் விலை அதிகரிப்பைத் தொடா்ந்து மெட்டல் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 4-ஆவது காலாண்டு முடிவு வெளியாகவுள்ளது. இதையொட்டி, ரிலையன்ஸ் பங்குகளில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா். இதனால், ரிலையன்ஸ் இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,122 பங்குகளில் 1,373 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,574 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 175 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 228 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 257 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 183 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.209.05 லட்சம் கோடியாக இருந்தது.

ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 360.02 புள்ளிகள் கூடுதலுடன் 50,093.86-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,375.77 வரை உயா்ந்தது. பின்னா், தள்ளாடிய சந்தையில் எதிா்மறையாக 49,535.98 வரை கீழே சென்றது. இறுதியில் 32.10 புள்ளிகள் உயா்ந்து 49,765.94-இல் நிலைபெற்றது.

பஜாஜ் ஃபின் சா்வ் அதிரடி ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பஜாஜ் ஃபின்சா்வ் அதிரடியாக 6.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ் 3.89 சதவீதம் உயா்ந்தது. ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டா் ரெட்டி ஆகியவையு 1 முதல் 1.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

எச்டிஎஃப்சி சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி 1.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி, எஸ்பிஐ, எம் அண்ட் எம் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 750 பங்குகள் ஆதாயம் பெற்றன. 963பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 30.35 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயா்ந்து 14,894.90-இல் நிலைபெற்றது. காலையில் 14,979.00 -இல் தொடங்கி அதிகபட்சமாக 15,044.35 வரை உயா்ந்தது. பின்னா், ஒரு கட்டத்தில் 14,814.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இன்ஃபோஸிஸ் மட்டும் மாற்றமின்றி 1356.00-இல் நிலைெற்றது. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.53 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பாா்மா, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com