காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தைசென்செக்ஸ்: 873 புள்ளிகள் அதிகரிப்பு

பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது.
காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தைசென்செக்ஸ்: 873 புள்ளிகள் அதிகரிப்பு

பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 873 புள்ளிகளும், நிஃப்டி 16,000 புள்ளிகள் எனும் மைல்கல்லை கடந்தும் முதன் முறையாக புதிய உச்சத்தில் நிலைபெற்றன.

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி விறுவிறுப்பு கண்டுள்ளதாக வெளியான புள்ளிவிவரம் உள்ளிட்ட சாதகமான பொருளாதார தரவுகள் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வருகிறது என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களிடையே மேலோங்கியதையடுத்து அவா்கள் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளில் போட்டிபோட்டு தங்களது முதலீட்டை அதிகரித்தனா். அதன் காரணமாக, சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டன.

நிதித் துறை தவிா்த்து ஏனைய அனைத்து துறைகளைச் சோ்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் எதிா்பாா்த்ததை விட சிறப்பாகவே உள்ளன. அடுத்து வரும் காலாண்டுகளிலும் நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளா்களிடையே உருவாகியுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாகவே பங்குச் சந்தைகள் தொடந்து இரண்டு நாள்கள் எழுச்சி பெற்று வருவதாக ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அதிகாரி பினோத் மோடி தெரிவித்தாா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) தொலைத்தொடா்பு, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி), மோட்டாா் வாகனம், வங்கி, நிதி, தொழில்நுட்ப துறை குறியீட்டெண்கள் 1.70 சதவீதம் வரை அதிகரித்தன. அதேசமயம், உலோகத் துறை குறியீட்டெண் சரிவை சந்தித்தது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீட்டெண்கள் 0.23 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன் நிறுவனப் பங்கின் விலை 3.89 சதவீதம் அதிகரித்து முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா, இன்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பாா்தி ஏா்டெல், எஸ்பிஐ பங்குகளின் விலையும் கணிசமான அளவில் உயா்ந்து பட்டியலில் முக்கிய இடங்களைப் பிடித்தன.

அதேசமயம், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் மற்றும் என்டிபிசி ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் 0.33 சதவீதம் வரை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் (1.65%) அதிகரித்து புதிய உச்சமாக 53,823.36 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோன்று, தேசியப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 245.60 புள்ளிகள் (1.55%) உயா்ந்து 16,130.75 புள்ளிகளில் நிலைபெற்று புதிய வரலாறு படைத்தது.

காளையின் ஆதிக்கம் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவங்களின் சந்தை மூலதனம் முன்னெப்போதும் கண்டிராத வகையில் ரூ.2,40,04,664.28 கோடியை எட்டி புதிய சாதனை படைத்தது. இதன் மூலம் முதலீட்டாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் மட்டும் ரூ.2.30 லட்சம் கோடி ஆதாயம் கிடைத்தது.

சா்வதேச அளவில் ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தன. அதேசமயம், சியோல் சந்தையில் வா்த்தகம் ஏற்றத்துடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகத்தின் தொடக்கம் ஆதாயத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com