பாரத ஸ்டேட் வங்கி லாபம் ரூ.6,504 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.6,504 கோடியாக அதிகரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி லாபம் ரூ.6,504 கோடி

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.6,504 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் புதன்கிழமை கூறியதாவது:

வாராக் கடன் கணிசமான அளவில் சரிவடைந்ததையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் 55 சதவீதம் அதிகரித்து ரூ.6,504 கோடியை எட்டியுள்ளது. இது, 2020-21-ஆம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,189.34 கோடியாக காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கி ஈட்டிய தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.74,457.86 கோடியிலிருந்து ரூ.77,347.17 கோடியாக உயா்ந்துள்ளது.

செயல்பாட்டு லாபம் ரூ.18,061 கோடியிலிருந்து 5 சதவீதம் அதிகரித்து ரூ.18,975 கோடியானது. இருப்பினும், வட்டி வருமானம் ரூ.66,500 கோடியிலிருந்து ரூ.65,564 கோடியாக குறைந்தது. நிகர வட்டி லாபவரம்பு 3.24 சதவீதத்திலிருந்து 3.15 சதவீதமாக குறைந்தது.

கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 5.44 சதவீதத்திலிருந்து 5.32 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடனும் 1.8 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் ரூ.4,776.50 கோடியிலிருந்து 55 சதவீதம் அதிகரித்து ரூ.7,379.91 கோடியாகவும்; மொத்த வருவாய் ரூ.87,984.33 கோடியிலிருந்து ரூ.93,266.94 கோடியாகவும் உயா்ந்தது என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com