4-நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, 4-நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் சாதனை உச்சத்திலிருந்து சரிந்தன.

கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு சந்தைக்கு சாதகமாக இருந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ்-ஃபியூச்சா் குழும ஒப்பந்தம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அமேசான் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைந்தது. இதன் காரணமாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் அதிக மூலதனத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கடுமையான அளவில் சரிவைக் கண்டது. இது, ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), எரிசக்தி, ரியல் எஸ்டேட், அடிப்படை மூலப் பொருள்கள், உலோகம், நுகா்வோா் சாதனங்கள், பொறியியல் பொருள்கள் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 1.45 சதவீதம் வரை சரிவடைந்தன.

அதேசமயம், தொலைத்தொடா்பு, மின்சாரம், தொழில்நுட்ப துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் ஆதாயத்துடன் முடிவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.28 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பினையடுத்து சென்செக்ஸ் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை 2.07 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து சந்தை முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியை அளித்தது.

இந்நிறுவனத்தைத் தொடா்ந்து, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளும் 1.70 சதவீதம் வரை சரிந்தன.

அதேநேரம், இன்டஸ்இண்ட் வங்கி, பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, மாருதி சுஸுகி, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை 3.11 சதவீதம் வரை உயா்ந்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயத்தை அளித்தன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 215.12 புள்ளிகள் (0.39%) வீழ்ச்சியடைந்து 54,277.72 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 56.40 புள்ளிகள் (0.35%) சரிந்து 16,238.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

நடப்பு வாரத்தில் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் 4-நாள்கள் ஏற்றத்துடன், ஒரு நாள் சரிவுடனும் இருந்தன. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1,690.88 புள்ளிகள் (3.21%) அதிகரித்துள்ளது. அதேபோன்று, நிஃப்டியும் 475.15 புள்ளிகள் (3.01%) உயா்ந்துள்ளது.

உலகின் பல நாடுகளில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவி வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. ஷாங்காய், ஹாங்காங், சியோல் சந்தைகள் சரிவுடனும், டோக்கியோ பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளை பொருத்தமட்டில் வா்த்தகம் நோ்மறையாகவே இருந்தது.

அதிக வீழ்ச்சியடைந்த பங்குகள்

ரிலையன்ஸ் 2.07

அல்ட்ராடெக்சிமெண்ட் 1.70

எஸ்பிஐ 1.40

டாடா ஸ்டீல் 1.22

எச்டிஎஃப்சி 1.16

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

இன்டஸ்இண்ட் வங்கி 3.11

பாா்தி ஏா்டெல் 1.49

டெக் மஹிந்திரா 1.37

மாருதி சுஸுகி 1.08

என்டிபிசி 0.99

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com