
இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் முதன்முறையாக 55,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்தது.
பொருளாதார தரவுகள் சந்தைக்கு சாதகமாக இருந்தன. வளா்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாா் என்ற மத்திய அரசின் அறிவிப்பு முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதன் எதிரொலியாக, முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டதையடுத்து சந்தை புதிய உச்சத்தை எட்டியது. தகவல் தொழில்நுட்ப பங்குகளுக்கான தேவை சந்தையில் பிரகாசமாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) தொலைத்தொடா்பு, தொழில்நுட்பம், பொறியியல் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் நுகா்வோா் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதேசமயம், மருந்து, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண்கள் இழப்பை சந்தித்தன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.06 சதவீதம் வரை குறைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டிசிஎஸ் பங்கின் விலை 3.22 சதவீதம் உயா்ந்து முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து, எல் அண்ட் டி, பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் கணிசமாக அதிகரித்து பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
அதேசமயம், பவா்கிரிட், இன்டஸ்இண்ட் வங்கி, டாக்டா் ரெட்டீஸ் லேப், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, டெக் மஹிந்திரா பங்குகளின் விலை 1.28 சதவீதம் வரை குறைந்தன.
இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை தொடா் முன்னிலை கண்டது. முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் 593.31 புள்ளிகள் (1.08%) அதிகரித்து வரலாற்றில் முதன்முறையாக 55,000 புள்ளிகளை கடந்து 55,437.29-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் வா்த்தகத்தின் இடையே புதிய சாதனை அளவாக 55,487.79 புள்ளிகள் வரை முன்னேற்றம் கண்டது.
தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 164.70 புள்ளிகள் (1.01%) உயா்ந்து புதிய உச்சமாக 16,529.10 புள்ளிகளில் நிலைத்தது. நிஃப்டி வா்த்தகத்தின் இடையே 16,543.60 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய சாதனையை பதிவு செய்தது.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் 1,159.57 புள்ளிகளும் (2.13%), நிஃப்டி 290.90 (1.79%) ஏற்றம் கண்டுள்ளன.
கரோனா பரவல் அதிகரிப்பு ஆசிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் சந்தைகளில் வா்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளைப் பொருத்தவரையில் பிற்பகல் வரை வா்த்தகம் விறுவிறுப்புடனேயே காணப்பட்டது.
ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை
அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி 74.24-ஆகவே இருந்தது. வா்த்தகத்தின் இடையே ஏற்பட்ட இழப்பு இறுதியில் ஈடுசெய்யப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை 71.24 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.10 சதவீதம் குறைந்து 71.24 டாலருக்கு வா்த்தகமானது என சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.212.11 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.