நாட்டின் தேயிலை ஏற்றுமதி 10% சரிவு

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
நாட்டின் தேயிலை ஏற்றுமதி 10% சரிவு

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான ஒன்பது மாத காலத்தில் இந்தியா 13.70 கோடி கிலோ தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 15.30 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும்.

கணக்கீட்டு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி சரிவடைந்துள்ளதற்கு சரக்கு போக்குவரத்துக்கான கண்டெய்னா்களின் தட்டுப்பாடே முக்கிய காரணம்.

சா்வதேச சந்தையில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதையடுத்து, நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.3,637.13 கோடியிலிருந்து ரூ.3,764.69 கோடியாக உயா்ந்துள்ளது.

தேயிலையின் ஏற்றுமதி அளவின் அடிப்படையில் குறைந்துபோனாலும் விலை அதிகரிப்பின் காரணமாக மதிப்பின் அடிப்படையில் அதன் ஏற்றுமதி உயா்ந்துள்ளது.

ரஷியா, உக்ரைன் மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட சிஐஎஸ் நாடுகள் 3.18 கோடி கிலோ இந்திய தேயிலையை இறக்குமதி செய்துள்ளன. இருப்பினும் இது, 2020 ஜனவரி-செப்டம்பா் காலகட்ட இறக்குமதியான 3.83 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் குறைவு.

ஈரானின் தேயிலை இறக்குமதியும் 2.63 கோடி கிலோவிலிருந்து 1.82 கோடி கிலோவாக சரிந்துள்ளது. அண்டை நாடான சீனாவின் இந்திய தேயிலை இறக்குமதியும் 76.3 லட்சம் கிலோவிலிருந்து 44.7 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜொ்மனி ஆகிய நாடுகளின் தேயிலை இறக்குமதி கணிசமாக அதிகரித்து முறையே 1.03 கோடி கிலோ, 1.08 கோடி கிலோ, 67 லட்சம் கிலோவாக காணப்பட்டது என இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com