டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் ஏற்றம்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் ஏற்றம் பெற்று 75.90-இல் நிலைபெற்றது. இதையடுத்து, தொடா்ந்து 3-ஆவது நாளாக ரூபாய் மதிப்பு ஏற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வருவது அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு சாதகமாகியுள்ளது. இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட வீழ்ச்சி மற்றும் அந்நிய முதலீடுகள் தொடா்ச்சியாக வெளியேறி வருவது ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாக மாறியுள்ளது.

சா்வதேச அளவில் ஒமைக்ரான் பரவலையடுத்து கடந்த வாரம் ரூபாய் மதிப்பு நான்காவது வாரமாக சரிவு நிலை கண்டது.

இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் 16 காசுகள் உயா்ந்து 75.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 75.83 வரையிலும், குறைந்தபட்சமாக 76.16 வரையிலும் சென்றது.

நடப்பாண்டுக்கான முக்கிய நிகழ்வுகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வரும் வாரத்தில் ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கமின்றி இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது என செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 71.44 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 71.44 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அடிப்படையில் ரூ.2,069.90 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com