எண்ணெய் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்: அமெரிக்காவுக்கு ஈரான் வலியுறுத்தல்

ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அனுமதிப்பதாக உறுதியளிக்க வேண்டும் என அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹூசைன் அமிரப்துல்லாஹியன்.
ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹூசைன் அமிரப்துல்லாஹியன்.

தெஹ்ரான்: ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அனுமதிப்பதாக உறுதியளிக்க வேண்டும் என அந்நாடு வலியுறுத்தியுள்ளது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அந்த நாடு இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹூசைன் அமிரப்துல்லாஹியன் தெஹ்ரானில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

‘ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக மீண்டும் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையானது பொருளாதாரத் தடையால் எங்கள் நாட்டின் எண்ணெய்த் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறோம். ஈரானின் கச்சா எண்ணெய் தடையின்றி விற்பனை செய்யப்பட வேண்டும்; அதற்கான தொகை வந்து சேர வேண்டும் என்பதே இதன் நோக்கம். அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம்’ என்றாா் அவா்.

முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சயீத் காடிப்ஷாதே, ‘ஒப்பந்தத்தை தாண்டி எதையும் ஈரான் கோருவதை மேற்குலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனக் குற்றம்சாட்டினாா்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீதான தடைக்குப் பதிலாக பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம் ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு கையொப்பமானது. ஆனால், 2018-இல் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளையும் விதித்தாா். இந்தத் தடையைத் தொடா்ந்து, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறும் ஒப்பந்தத்தை சா்வதேச எண்ணெய் நிறுவனங்கள் ரத்து செய்தன. இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மீண்டும் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் இந்த மாத ஆரம்பத்தில் பேச்சுவாா்த்தை தொடங்கிய நிலையில், புதிய கோரிக்கைகளை ஈரான் எழுப்பியதால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் பேச்சு தொடங்கவுள்ள நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com