சென்செக்ஸ் மேலும் 477 புள்ளிகள் முன்னேற்றம்: சந்தை மதிப்பு ரூ.2.60 லட்சம் கோடி உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்தது.
சென்செக்ஸ் மேலும் 477 புள்ளிகள் முன்னேற்றம்: சந்தை மதிப்பு ரூ.2.60 லட்சம் கோடி உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 477 புள்ளிகள் உயர்ந்து 57,897-இல் நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பும் ரூ.2.60 லட்சம் கோடி உயர்ந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. குறிப்பாக ஆசியா, ஐரோப்பிய சந்தைகள் நேர்மறையாக செயல்பட்டன. அவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க சந்தையின் எஸ் அண்ட் பி -500 குறியீடு திங்கள்கிழமை சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் பாதிக்க வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். இது சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 மேலும், முன்பேர வர்த்தகத்தில் டிசம்பர் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க இன்னும் இரண்டு நாள்களே உள்ளதால், ஏற்கெனவே பங்குகளை விற்றிருந்தவர்கள் அவற்றை வாங்குவதில் கவனம் செலுத்தி வருவதும் சந்தை ஏற்றம் பெறக் காரணமாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.263.51 லட்சம் கோடி: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,478 நிறுவனப் பங்குகளில் 772 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 2,612 பங்குகள் ஆதாயம் பெற்றன. 94 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.
 372 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 751 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 91 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.60 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.263.51 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9.15 கோடியாக உயர்ந்துள்ளது.
 "காளை' தொடர்ந்துஆதிக்கம்:
 காலையில் சென்செக்ஸ் 330.97 புள்ளிகள் கூடுதலுடன் 57,751,21-இல் தொடங்கி, 57,650.29 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,952.48 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 477.24 புள்ளிகள் (0.83 சதவீதம்) கூடுதலுடன் 57,897.48-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் இன்டஸ்இண்ட் பேங்க், பவர் கிரிட் ஆகியவை மட்டும் சிறிதளவு (0.30 சதவீதம்) சரிவைச் சந்தித்தன. மற்ற 28 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன.
 ஏஷியன் பெயிண்ட்ஸ் அபாரம்: பிரபல பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஏஷியன் பெயிண்ட்ஸ் 2.85 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பார்மா, அல்ட்ரா டெக், எம் அண்ட் எம், டைட்டன் ஆகியவை 2.20 முதல் 2.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், என்டிபிசி, எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின் சர்வ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 147 புள்ளிகள் ஏற்றம்:
 தேசிய பங்குச் சந்தையில் 1,481 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 388 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 147 புள்ளிகள் (0.86 சதவீதம்) உயர்ந்து 17,233.25-இல் நிலைபெற்றது.
 காலையில் உற்சாகத்துடன் 17,177.60-இல் தொடங்கி 17,161.15 வரை மட்டுமே கீழே சென்றது.
 பின்னர், பிற்பகலில் 17,250.25 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 48 பங்குகள் ஆதாயம் பெற்றன. இன்டஸ்இண்ட் பேங்க், பவர் கிரிட் ஆகிய இரு நிறுவனப் பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.
 அனைத்துக் குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ், ஐடி, பார்மா, ஹெல்த்கேர், மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com