6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: பங்குச் சந்தையில் திடீர் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது.
6 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: பங்குச் சந்தையில் திடீர் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது. ஆனால், காலையில் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் வர்த்தகம் முடிவடையும் தருவாயில் லாபப் பதிவால் காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் இழந்தன. சென்செக்ஸ் 19.69 புள்ளிகள், நிஃப்டி 6.50 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றன. இதையடுத்து, 6 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 பங்குச் சந்தையில் வர்த்தகம் முடியும் தருவாயில் ஏற்றம் இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, ஐடி, எஃப்எம்சிஜி, ஆட்டோ உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஏராளமான பங்குகளில் லாபப் பதிவு இருந்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. மேலும், சந்தையில் காலையிலிருந்தே பரந்த அடிப்படையிலான எழுச்சி காணப்படவில்லை. குறிப்பிட்ட சில பங்குகள் மட்டுமே சந்தைக்கு ஆதரவாக இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.202.44 லட்சம் கோடி:
 மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 3,158 பங்குகளில் 1,305 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,661 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 192 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக முடிவில் சந்தை மதிப்பு ரூ.202.44 லட்சம் கோடியாக இருந்தது. 316 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச
 விலையைப் பதிவு செய்துள்ளன. 310 பங்குகள் வெகுவாக உயர்ந்து உறை நிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தன.
 6 நாள் ஏற்றத்துக்கு முடிவு: சென்செக்ஸ் காலையில் 51,835.86 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், வர்த்தக நேர முடிவில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் இறுதியில் 19.69 புள்ளிகள் சரிவடைந்து 51,329.08-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 51,484.23 வரை கீழே சென்றது. இதனால், 6 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 ஏசியன் பெயிண்ட்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட்ஸ் 3.70 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஓஎன்ஜிசி, டைட்டன், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே இந்தியா உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம், எம் அண்ட் எம் 3.63 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 மேலும், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, சன்பார்மா, டிசிஎஸ், இன்டஸ்இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 678 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,053 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி வர்த்தகத்தின் போது 15,257.10 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் உச்சத்தைப் பதிவு செய்தது. இருப்பினும் வர்த்தக நேர முடிவில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால் இறுதியில் நிஃப்டி 6.50 புள்ளிகள் குறைந்து 15,109.30-இல் நிலைபெற்றது. பேங்க், பைனான்சியல் சர்வீசஸ் துறை குறியீடுகள் தவிர்த்து மற்ற துறை குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com