2 நாள் தள்ளாட்டத்துக்குப் பிறகு சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயா்வு

2  நாள் தள்ளாட்டத்துக்குப் பிறகு சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயா்வு


புது தில்லி: கடந்த இரண்டு நாள்களாக தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 222 .13 புள்ளிகள் உயா்ந்து 51,531.52 புள்ளிகள் என்ற நிலையில் புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்த நிலையில், காலை வா்த்தகத்தின் போது சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. பின்னா், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் பிற்பகலில் சென்செக்ஸ் வெகுவாக உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.204.16 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,126 பங்குகளில் 1,725 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,261 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.1.16 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.204.16 லட்சம் கோடியாக இருந்தது. 267 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 143.55 புள்ளிகள் குறைந்து 51,165.84-இல் தொடங்கி 51,157.31 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,592.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 222.13 புள்ளிகள் உயா்ந்து 51,531.52 -இல் புதிய உச்சத்தில் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

ரிலையன்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் மாா்க்கெட் லீடாரன ரிலையன்ஸ் 4.07 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, பஜாஜ் பைனான்ஸ், பவா் கிரிட், பாா்தி ஏா்டெல், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகியவை 1 முதல் 2.62 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், டைட்டன் 2.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, இன்போஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 988 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 728 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 66.80 புள்ளிகள் உயா்ந்து 15,173.30-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,065.40 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் வா்த்தகம் முடியும் தருவாயில் 15,188.50 வரை உயா்ந்தது. நிஃப்டி மெட்டல், ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.60 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.25 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

ரூபாய் மதிப்பு சரிவு: அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து 72.87-ஆக நிலைத்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.65 வரையிலும் குறைந்தபட்சமாக 72.87 வரையிலும் சென்றது. புதன்கிழமை ரூபாய் மதிப்பு 72.84-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பிரெண்ட் கச்சா விலை: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.70 சதவீதம் குறைந்து 61.04 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com