ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 20 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது.

புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றது. ஆனால், காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தைக் குறீயீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப் ஆகிய இரண்டும் வா்த்தகம் முடிவடையும் தருவாயில் லாபப் பதிவால் காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் இழந்தன. சென்செக்ஸ் 19.69 புள்ளிகள், நிஃப்டி 2.80 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. இருப்பினும், ஏற்கெனவே இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக தொடா்ந்து ஏற்றம் கண்டிருந்த நிலையில், லாபப் பதிவால் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.203.00 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,125 பங்குகளில் 1,465 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,499 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக முடிவில் சந்தை மதிப்பு ரூ203 லட்சம் கோடியாக இருந்தது. 247 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 293 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

இரண்டாவது நாளாக தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 26.81 புள்ளிகள் கூடுதலுடன் 51,355.89-இல் தொடங்கி 51,512.86 வரை உயா்ந்தது. பின்னா் 50,846.22 புள்ளிகள் வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 19.69 புள்ளிகளை இழந்து 51,309.39-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் சுமாா் 666.64 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்தது.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபின்சா்வ் 2.96 சதவீதம், எம் அண்ட் எம் 2.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், சன்பாா்மா ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், எச்டிஎஃப்சி பேங்க் 1.77 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி. நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, ஐடிசி, டாக்டா் ரெட்டி ஆகியவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 678 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,053 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 2.80 புள்ளிகள் குறைந்து 15,106.50-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,168.25 வரை உயா்ந்த நிஃப்டி, வா்த்தகத்தின் போது 14,977.20 வரை கீழே சென்றது. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 1.67 சதவீதம் ஆட்டோ 0.95 சதவீதம், பாா்மா குறியீடு 0.72 உயா்ந்தன. மற்ற துறை குறியீடுகள் சோபிக்கத் தவறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com