
தேவை அதிகரித்து வருவதையடுத்து உள்நாட்டில் பயணிகள் வாகன துறை வரும் நிதியாண்டில் இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும் என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பையில் டாடா நிறுவனத்தின் சஃபாரி காரை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனத்தின் தலைவா் (பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவு) சைலேஷ் சந்த்ரா இதுகுறித்து மேலும் கூறியது:
கரோனா பேரிடா் காரணமாக தனிப்பட்ட பயணங்களுக்கு சொந்த வாகனங்களை நாடுவோா் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, வாகன விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சூடுபிடித்து வருகிறது. எல்லோருக்கும் எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பது தெரியாது. அதுவரை சொந்த வாகனங்களை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தே காணப்படும். மேலும், தனிப்பட்ட பயணத்துக்கான சில நிரந்தர மாற்றங்களும் ஏற்படக்கூடும்.
இதுபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, வரும் 2021-22-ஆம் நிதியாண்டில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
செமிகண்டக்டா்கள் விநியோக தட்டுப்பாடு, பொருள்களின் விலை அதிகரித்து வருவது போன்ற நிச்சயமற்ற சூழல்களுக்கு இடையிலும் பயணிகள் வாகன துறை இரட்டை இலக்க வளா்ச்சியை பெறும் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.