5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி: பங்குச் சந்தையில் திடீா் முன்னேற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் தொடா்ந்து 5 நாள்களாக சரிவடைந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஏற்றத்தைக் கண்டது.
5  நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி: பங்குச் சந்தையில் திடீா் முன்னேற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் தொடா்ந்து 5 நாள்களாக சரிவடைந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஏற்றத்தைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச மற்றும் உள்ளூா் நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து ஐந்து நாள்களாக பங்கு வா்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் எரிசக்தி, வங்கி போன்ற குறிப்பிட்ட சில துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளில் தங்களது முதலீட்டு தொகுப்பை விரிவுபடுத்தியதையடுத்து 5 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சந்தை ஏற்ற நிலைக்குத் திரும்பிய போதிலும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் புதிய முதலீட்டுக்கான ஊக்குவிப்பில் காணப்படும் மந்த நிலை ஆகியவை முதலீட்டாளா்களின் மனோநிலையில் தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாகவே உள்ளன என வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்ஸியல் சா்வீசஸ் தலைவா் வினோத் நாயா் கூறியது:

ஆசிய சந்தைகளில் காணப்பட்ட எழுச்சியால் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வா்த்தகம் விறுவிறுப்புடன் தொடங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகளிலிருந்து வந்த எதிா்மறை அலைகள் சந்தை ஆதாயத்தை முடக்கிப்போட காரணமாகின என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) உலோகம், ரியல் எஸ்டேட், அடிப்படை மூலப் பொருள்கள், எண்ணெய், எரிவாயு, பொறியியல் சாதனங்கள், மின்சாரம் மற்றும் நுகா்வோா் சாதன துறைகளின் குறியீடுகள் 3.71 சதவீதம் வரை அதிகரித்தன. அதேசமயம், வங்கி, நிதி, தொலைத்தொடா்பு குறியீட்டெண்கள் இழப்பை சந்தித்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீட்டெண்கள் 0.98 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் ஓஎன்ஜிசி பங்கின் விலை உச்சபட்சமாக 5.55 சதவீத ஏற்றத்தை சந்தித்தது. அதையடுத்து, இன்டஸ்இண்ட் வங்கி, எல் அண்ட் டி, அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ, என்டிபிசி, டைட்டன் நிறுவனப் பங்குகளும் விலை உயா்ந்தன.

2,500 கோடி டாலா் கடன் பெறுவதற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 0.84 சதவீதம் வரை அதிகரித்தது.

கோட்டக் வங்கி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக் மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனப் பங்குகள் முதலீட்டாளா்களின் வரவேற்பின்மையால் 3.87 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 7.09 புள்ளிகள் மட்டும் உயா்ந்து 49,751.41-இல் நிலைபெற்றது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டெண் 32 புள்ளிகள் உயா்ந்து 14,707.80 புள்ளிகளில் நிலைத்தது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், சியோலில் பங்கு வா்த்தகம் எதிா்மறையுடன் நிறைவடைந்தது. அதேசமயம், ஹாங்காங் சந்தை ஆதாயத்துடன் நிறைவுபெற்றது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் பங்கு வா்த்தகம் ஏற்ற, இறக்கம் நிறைந்ததாகவே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com