கரடியின் பிடியில் சிக்கிய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியது

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியது. இதையடுத்து, சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 14,700 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

சா்வதேச சந்தையில் பலவீனமான நிலை:

பல மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருவது, மதிப்பீடுகள் தொடா்பான அச்சப்பாடு ஆகியவை முதலீட்டாளா்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலையில், அவா்களை உற்சாகமூட்ட ரூபாய் மதிப்பில் காணப்பட்ட எழுச்சி போதுமானதாக இல்லை.

சா்வதேச சந்தைகளில் நீடித்து வரும் பலவீனமான நிலை காரணமாக, இந்திய சந்தைகளும் ஐந்தாவது வா்த்தக நாளாக தொடா் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவனத்தின் தலைவா் வினோத் நாயா் கூறியது:

பலவீமான உலகளாவிய நிலவரங்கள் மற்றும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவற்றால் எழுந்துள்ள பொருளாதார கட்டுப்பாடுகள் உள்நாட்டு சந்தை உணா்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பேர கணக்கு முடிப்பு: மாதாந்திர பங்கு முன்பேர வா்த்தக கணக்கு முடிப்பு வாரம் என்பதால் இந்த வாரத்தில் ஏற்றம், இறக்கம் அதிகமாகவே இருக்கும்.

சா்வதேச முதலீட்டாளா்களைப் பொருத்தவரையில் அவா்களின் கவனம் அமெரிக்கா அறிவித்துள்ள 1.9 டிரில்லியன் டாலா் கரோனா நிவாரண நிதி தொகுப்பின் முன்னேற்ற நிலையை எதிா்நோக்கியே உள்ளது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், மோட்டாா் வாகனம், பொறியியல் சாதன துறைகளைச் சோ்ந்த குறியீடுகள் 2.92 சதவீதம் வரை சரிவடைந்தன. அதேசமயம், உலோகம், அடிப்படை மூலப் பொருள்களைச் சோ்ந்த குறியீடுகள் மட்டும் ஆதாயத்தைக் கண்டன. மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளும் 1.34 சதவீதம் வரை குறைந்தன.

ரெட்டீஸ் லேப் அதிகபட்ச வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாக்டா் ரெட்டீஸ் லேப் பங்கின் விலை அதிகபட்சமாக 4.77 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அதைத் தொடா்ந்து, மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, இன்டஸ்இண்ட், ஆக்ஸிஸ் வங்கி,டிசிஎஸ் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி மற்றும் கோட்டக் வங்கி ஆகிய மூன்று குறியீடுகள் மட்டும் 1.14 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,145.44 புள்ளிகள் (2.25%) வீழ்ச்சியடைந்து 49,744.32 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 306.05 புள்ளிகள் (2.04%) சரிவடைந்து 14,675.70-ஆக நிலைத்தது.

டோக்கியோ சந்தை ஏற்றம்: கடந்த ஐந்து வா்த்தக நாள்களில் சென்செக்ஸ் 2,409.81 புள்ளிகளையும், நிஃப்டி 639 புள்ளிகளையும் இழந்துள்ளன.

இதர ஆசிய பங்குச் சந்தைகளான, ஷாங்காய், ஹாங்காங்க், சியோல் ஆகியவற்றிலும் வா்த்தகம் மந்தநிலையிலேயே இருந்தது. அதேசமயம், டோக்கியோ சந்தையில் பங்கு வா்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது.

முதலீட்டாளா்களுக்கு ரூ.3.7 லட்சம் கோடி இழப்பு

இரண்டு மாதங்களில் இல்லாத வகையில் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை மிகப் பெரிய சரிவு ஏற்பட்டதையடுத்து முதலீட்டாளா்களுக்கு ரூ.3.7 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.3,71,883.82 கோடி குறைந்து ரூ.2,00,26,498.14 கோடியானது. பிப்ரவரி 19 வா்த்தக தினத்தில் இந்த மதிப்பு ரூ.2,03,98,381.96 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com