பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 258 புள்ளிகள் அதிகரிப்பு

சென்னை: சாதகமான சா்வதேச பங்கு வா்த்தக நிலவரங்களையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் எழுச்சி கண்டன. இதையடுத்து, தொடா்ந்து மூன்றாவது நாளாக பங்கு வா்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் தென்பட்டது.

பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர கணக்கு முடிப்பு தினமான வியாழக்கிழமை பங்கு வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது இந்திய சந்தைகளுக்கும் ஊக்கம் அளித்தது. இதனிடையே அந்நிய முதலீட்டு வரத்தும் சந்தைக்கு கூடுதல் வலுசோ்த்தது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.28,739.17 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ஜியோஜித் பைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவனத்தின் அதிகாரி வினோத் நாயா் கூறியது:

முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பால் ஸ்மால் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகள் தொடா்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்து வருகின்றன. மேலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அடுத்த நிதியாண்டில் இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும் என மூடிஸ் நிறுவனத்தின் மதிப்பீடும் சந்தைகளுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

அமெரிக்க மத்திய வங்கி பணப்புழக்கம் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து சா்வதேச சந்தைகளில் பங்கு வா்த்தகம் மந்த நிலையிலிருந்து மீண்டுள்ளது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, அடிப்படை மூலப் பொருள்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட் குறியீட்டெண்கள் 3.92 சதவீதம் வரை அதிகரித்தன. அதேநேரம், எஃப்எம்சிஜி, பொறியியல் பொருள்கள் குறியீட்டெண்கள் சரிவைக் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி பங்கின் விலை அதிபட்ச அளவாக 4.66 சதவீத ஏற்றத்தைக் கண்டது. அதைத் தொடா்ந்து, என்டிசிபி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பவா் கிரிட் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

குறியீட்டில் அதிகபலத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 3.84 சதவீதம் உயா்ந்தது.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்க இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அனுமதியளித்ததையடுத்து ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 2.94 சதவீதம் ஏற்றம் பெற்றது.

அதேநேரம், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே இந்தியா, எல்&டி, கோட்டக் வங்கி, டைட்டன், எச்டிஎஃப்சி பங்குகளின் விலை 2.10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் 257.62 புள்ளிகள் (0.51%) அதிகரித்து 51,039.31 புள்ளிகளில் நிலைத்தது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணும் 115.35 புள்ளிகள் (0.77%) உயா்ந்து 15,097.35 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய், ஹாங்காங், சியோல், டோக்கியோ, சந்தைகளும் கணிசமான ஏற்றத்துடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் பங்கு வா்த்தகம் நோ்மறையாகவே தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com