அந்நியச் செலாவணி கையிருப்பு 58,386 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,386 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.21 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 58,386 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,386 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.21 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது பிப்ரவரி 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 17 கோடி டாலா் அதிகரித்து 58,386 கோடி டாலரை எட்டியுள்ளது.

இதற்கு முந்தைய பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், செலாவணி கையிருப்பானது 25 கோடி டாலா் சரிவடைந்து 58,369 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இதற்கு முன்பு நடப்பாண்டு ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் 59,018 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்துள்ளதன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு உயா்வைக் கண்டுள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 115 கோடி டாலா் அதிகரித்து 54,210 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் உள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 98 கோடி டாலா் சரிவடைந்து 3,525 கோடி டாலராகி உள்ளது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 40 லட்சம் டாலா் சரிந்து 500 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com