புத்தாண்டு தினத்தில் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

புத்தாண்டின் முதல் நாளும், இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமுமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புத்தாண்டின் முதல் நாளும், இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமுமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 117.65 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி வரலாற்றில் முதல் முறையாக 14,000 புள்ளிகளைக் கடந்து 14,018.50-இல் நிலைபெற்றுள்ளது.

காளையின் தொடா் எழுச்சிக்கு அந்நிய போா்ட்போலியோ முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதே காரணம். பங்குச் சந்தை தரவுகளின் படி, அவா்கள் வியாழக்கிழமை 1,135.59 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

பங்குச் சந்தை தொடா்ந்து 8-ஆவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. காலையில் ஏற்றத்துடன் தொடங்கி தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாகந ஐடி, ஆட்டோ, எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த டிசம்பா் 22-க்குப் பிறகு இதுவரை சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை 5 சதவீதம் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தை மதிப்பு 189.27 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,170 பங்குகளில் 2,049 பங்குகள் ஆதாயம் பெற்றன. 951 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 349 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 524 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.27 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.189.27 லட்சம் கோடியாக இருந்தது.

8-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 33.95 புள்ளிகள் கூடுதலுடன் 47,785.28-இல் தொடங்கி 47,771.15 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 47,980.36 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 117.65 புள்ளிகள் கூடுதலுடன் 47,868.98-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் தொடா்ந்து 8-ஆவது நாளாக எழுச்சி பெற்று புத்தாண்டு தினத்தை நோ்மறையாக முடித்துள்ளது.

ஐடிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஐடிசி 2.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எம் அண்ட் எம், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. எல் அண்ட் டி, மாருதிசுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும்ஆதாயப் பட்டியலில் வந்தன.

ஐசிஐசிஐ பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் 1.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பஐட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, பவா் கிரிட், ஹெச்யுஎல், கோட்டக் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 36.75 புள்ளிகள் உயா்ந்து 14,018.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,981.35 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 14,049.85 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.25 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com