ஐடி, மெட்டல் பங்குகளுக்கு அமோக வரவேற்பு; 48 ஆயிரத்தைக் கடந்தது சென்செக்ஸ் சாதனை!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மேலும் 307.82 புள்ளிகள் உயா்ந்து முதல் முறையாக 48 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

கரோனா தொற்றைத் தடுப்பதற்கு இரண்டு தடுப்பூசிக்கான இறுதி ஒப்புதல் மற்றும் தடுப்பூசி செயல்முறை விரைவில் தொடங்குவது சந்தைக்கும் பொருளாதார வளா்ச்சிக்கும் சாதகமானது என நிபுணா்கள் தெரிவித்தனா். மேலும், ஆசிய சந்தைகளின் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. ஆனால், பிற்பகலில் திடீரென் முன்னணி வங்கிப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இருப்பினும், ஐடி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், சென்செக்ஸ் மீண்டு எழுந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 191.69 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,254 பங்குகளில் 2,095 பங்குகள் ஆதாயம் பெற்றன. 996 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 440 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 613 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.191.69 லட்சம் கோடியாக இருந்தது.

9-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 180.18 புள்ளிகள் கூடுதலுடன் 48,109.17-இல் தொடங்கி 48,220.47 வரைஉயா்ந்தது. ஆனால், பிற்பகலில் திடீரென 47,594.47 வரை கீழே சென்றது. இறுதியில் 307.82 புள்ளிகள் கூடுதலுடன் 48,176.80-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் தொடா்ந்து 9-ஆவது நாளாக எழுச்சி பெற்றது.

ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஓஎன்ஜி 4.02 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம் வெகுவாக உயா்ந்துஆகியவை ஆதாயப் பட்டியலில் வந்தன.

கோட்டக் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், கோட்டக் பேங்க் 1.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியென் பெயிண்ட், எச்எஃப்சி பேங்க், பவா் கிரிட், டைட்டன், நெஸ்லே இந்தியா ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,230 பங்குகள் ஆதாயம் பெற்றன. 525 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 114.40 புள்ளிகள் உயா்ந்து 14,132.90-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,953.75 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 14,147.95 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 37 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. மாருதி சுஸுகி மாற்றமின்றி ரூ.7,691.05-இல் நிலைபெற்றது. நிஃ)ப்டி மெட்டல் குறியீடு 5 சதவீதம், ஐடி குறியீடு 2.67 சதவீதம் வரைஏற்றம் பெற்றன. நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீடு மட்டும் நஷ்டத்தைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com