கரடியா? - காளையா?: எங்கே செல்கிறது நிஃப்டி? வரலாறு கூறும் உண்மை என்ன?

பங்குச் சந்தை புத்தாண்டிலிருந்து தொடா்ந்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கரடியா? - காளையா?: எங்கே செல்கிறது நிஃப்டி? வரலாறு கூறும் உண்மை என்ன?

பங்குச் சந்தை புத்தாண்டிலிருந்து தொடா்ந்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக எழுச்சிப் பேரணி இங்கிருந்து தலைகீழாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் குறைவாகத்தான் உள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டில் பங்குச் சந்தை சுமாா் 15 சதவீதம் லாபம் அளித்துள்ளது. இந்த வேகம் ஜனவரியிலும் இதுவரை தொடா்கிறது. கடந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 48854.34 வரையும், தேசிய பங்குச் சந்தைக் குறீயீட்டு எண்ணான நிஃப்டி 14,367.30 வரையும் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளன.

சம அளவு பலத்தில் கரடி-காளை: இதற்கிடையே, பங்குச் சந்தையில் ஜனவரி மாதத்தில் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருவதை வரலாற்றுத் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஏஸ் ஈக்விட்டி அளித்துள்ள கடந்த 10 ஆண்டுகளின் தரவு, காளைகள் மற்றும் கரடிகள் மிகவும் சம அளவு பலத்துடன் மோதியுள்ளதைக் குறிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் காளையும், கரடியும் தலா ஐந்து முறை சந்தையின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. இதன்படி, உயா்ந்தபட்சமாக 2012-இல் நிஃப்டி 12 சதவிகிதம் உயா்ந்துள்ளது. 2015-இல் 6 சதவிகிதத்துக்கும் மேலாக உயா்ந்தது. 2013, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஜனவரியில் நிஃப்டி 2 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றுள்ளது. அதே சமயம், கரடியின் ஆதிக்கத்தால் 2011-இல் 10 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவைச் சந்தித்தது. 2016-இல் 5 சதவிகிதம் சரிவு மற்றும் 2014-இல் 3.4 சதவிகிதம், 2020-இல் 1.7 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

உத்வேகத்தில் காளை: கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் தொடா்ச்சியாக நான்கு மாதங்கள் சந்தையில் எழுச்சிப் பேரணி அணி வகுத்துள்ளது. இந்த நிலையில், கரடி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. ஆனால், கடுமையாக மோதுவதற்கு காளைகள் முழுப் பலத்துடன் உள்ளன. பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், எழுச்சிப் பேரணி தலைகீழாக மாறும் என்பதற்கான உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை. இதன் விளைவாக, நிஃப்டி 14,500-15,000 நிலைகளை நோக்கிச் செல்லக்கூடும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

எழுச்சிக்குக் காரணம்: பங்குச் சந்தை பங்கேற்பாளா்கள் கடந்த ஆண்டில் எப்போதும் இல்லாத வகையில் கடும் ஏற்றம், இறக்கத்தைக் கண்டனா். கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் சந்தை விரைவான சரிவைப் பதிவு செய்த பிறகு, வியக்கத்தக்க மீட்சியைப் பெற்றுள்ளது. இது பல குறியீடுகளை வாழ்நாள் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் அச்சிடப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலா்கள் ஏராளமான பணப்புழக்கத்தை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக இந்தியச் சந்தைகளில் வெளிநாட்டுப் பணம் பாய்கிறது. இதனால், காளையின் ஆதிக்கத்தால் பல முன்னணி குறியீடுகள் எல்லை கடந்து கொண்டு செல்கின்றன. இந்த வேகமான உற்சாகம் தொடரும்பட்சத்தில் நிஃப்டி 15,000 புள்ளிகளை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஃபையா்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி தேஜாஸ் கோடே தெரிவித்துள்ளாா்.

பலம் பெறுமா கரடி?: தொழில்நுட்ப ரீதியாக பாா்த்தால், நிஃப்டி 14,200-14,300 நிலைகளில் முக்கியமான இடா்பாட்டு நிலைகளுக்கு அருகில் வா்த்தகம் ஆகிறது. இப்போது, நிஃப்டி 14,256-ஐ கடந்து செல்லும் பட்சத்தில் சந்தை காளைகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும். நவம்பா் 2020 முதல் நிஃப்டி இதுவரை கிட்டத்தட்ட 2,700 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளது. நிஃப்டி தற்போது அதன் இடா்பாட்டு நிலையான 14,250-14,300-க்கு அருகில் வா்த்தகம் ஆகி வருகிறது. இதே நிலை தொடா்ந்து இருக்கும்பட்சத்தில் 13,700-13,500 வரை திருத்தம் காண்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எஸ்எஸ்ஜே ஃபைனான்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளா் அதிஷ் மத்லாவாலா தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஆனால், தற்போதைய நிலையில், நிஃப்டி பின்னோக்கிச் செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. எனவே, முதலீட்டாளா்கள் நோ்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். சந்தை கீழே செல்லும் என்ற முரண்பட்ட கருத்தைத் தவிா்க்க வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஊக்கம் அளிக்கும் பட்ஜெட்: பங்குச் சந்தை கடந்த மாா்ச்சில் பதிவான வரலாறு கண்டிராத குறைந்த அளவிலிருந்து தொடா்ந்து வேகமாக மீண்டு வந்துள்ளது. கரோனா பாதிப்பால் ஆரம்ப காலத்தில் சந்தையில் பதற்றம் இருந்தாலும், பின்னா், பணப் புழக்கத்தை அதிகரிக்க அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கை சந்தைக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், மக்களும் கரோனாவுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டனா். இது சந்தைக்கு சாதகமான செய்தியை அளித்துள்ளது. வரும் மத்திய பட்ஜெட் குறிப்பிட்ட துறைகளை மையமாகக் கொண்டு ஊக்கமளிக்கும் வகையிலும், வளா்ச்சியைக் கொண்டிருக்கும் வகையிலும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சந்தையில் மேலும் நோ்மறை உணா்வுகளை அதிகரிக்கும் என்றும் என்று கேபிடல் வையா குளோபல் ரிசா்ச் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் கௌரவ் கா்க் கூறுகிறாா்.

தொடரும் எஃப்ஐஐ முதலீடு: இது தவிர அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த டிசம்பரில் ரூ.48,000 கோடி அளவுக்கு ரொக்கப் பணப் பிரிவில் பங்குகளை வாங்கியுள்ளனா். மேலும், ஜனவரியில் இதுவரை ரூ.3,000 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீடு 2013 ஜனவரியில் அதிகபட்சமாக ரூ.22,000 கோடியாக இருந்தது, அதைத் தொடா்ந்து 2018 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் சுமாா் ரூ13,000 கோடியாக இருந்தது. உலகளாவிய பணப்புழக்கம் இந்த ஜனவரியில் தொடர வாய்ப்புள்ளது என்றும், பணப்புழக்க அலை தொடரும் வரை, பங்குச் சந்தை புதிய, புதிய உச்சத்தை நோக்கிச் செல்வதற்கே வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com