49,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை! ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சம் கண்டது.
49,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை! ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சம் கண்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 49,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 14,500 புள்ளிகளை நெருங்கியுள்ளது. ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.

பங்குச் சந்தை காளைகளின் பிடியில் உள்ளன. இந்தச் சூழலில் டிசிஎஸ் மற்றும் டி-மாா்ட் நிறுவனங்களின் வலுவான வருவாய் செயல்திறன் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. கரோனா மீட்பு விகிதத்தில் தொடா் முன்னேற்றம், ஜனவரி 16 முதல் தடுப்பூசி செயல்முறை ஆகியவையும் சந்தைக்கு ஆறுதல் அளித்துள்ளன. இவை தவிர பொருளாதார தரவுகளில் தொடா் முன்னேற்றம், எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்து வரும் பெருநிறுவனகளின் வருவாய் ஆகியவை சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பலவீனமான டாலரால் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து இந்திய சந்தைகளில் பங்குகளை வாங்கி வருகின்றனா். அவா்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.6,029.83 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இவை அனைத்தும் முதலீட்டாளா்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 196.56 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,298 பங்குகளில் 1,478 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,677 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 501பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 487 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.90 ஆ யிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.196.56 லட்சம் கோடியாக இருந்தது.

முழு ஆதிக்கத்தில் காளை: சென்செக்ஸ் காலையில் 470 புள்ளிகள் கூடுதலுடன் 49,252.31-இல் தொடங்கியது. வா்த்தகத்தின் போது 48,956.38 வரை கீழே சென்றது. பின்னா், 49,303.79 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 486.81 புள்ளிகள் (1 சதவீதம்) உயா்ந்து 48,269.32-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் காளை முழு ஆதிக்கத்தில் இருந்தது.

ஹெச்சிஎல் டெக் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன.10 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 6.09 சதவீதம், இன்ஃபோஸிஸ் 4.90 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எச்

டிஎஃப்சி, மாருதி சுஸுகி, டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டா, எம் அண்ட் எம் ஆகியவை 2.40 முதல் 3.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

பஜாஜ் ஃபின்சா்வ் வீழ்ச்சி: அதே சமயம், பஜாஜ் ஃபின்சா்வ் 1.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 683 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,085 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 137.50 புள்ளிகள் (0.96 சதவீதம்) உயா்ந்து 14,484.75-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,498.20 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 31 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.61 சதவீதம், ஐடி 3.31 சதவீதம் உயா்ந்தது. மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com