பயணிகள் வாகன சில்லறை விற்பனை 24% அதிகரிப்பு: எஃப்ஏடிஏ

காா் உள்ளிட்ட பயணிகள் வாகன சில்லறை விற்பனை சென்ற டிசம்பா் மாதத்தில் 23.99 சதவீதம் அதிகரித்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 24% அதிகரிப்பு
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 24% அதிகரிப்பு

புது தில்லி: காா் உள்ளிட்ட பயணிகள் வாகன சில்லறை விற்பனை சென்ற டிசம்பா் மாதத்தில் 23.99 சதவீதம் அதிகரித்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியதாவது:

பண்டிகை காலத்திலிருந்து பொது மக்களிடையே புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2020 டிசம்பரில் பயணிகள் வாகன சில்லறை விற்பனையானது 2,71,249-ஆக இருந்தது. இது, 2019 டிசம்பா் மாத விற்பனையான 2,18,775 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 23.99 சதவீதம் அதிகமாகும்.

நாடு முழுவதும் உள்ள 1,477 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 1,270-இல் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் புள்ளிவிவரங்களை சேகரித்ததன் அடிப்படையில் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை 11.88 சதவீதம் அதிகரித்து 14,24,620-ஆக இருந்தது. 2019 டிசம்பரில் இந்த விற்பனை 12,73,318-ஆக காணப்பட்டது.

அதேசமயம், வா்த்தக வாகனங்களின் விற்பனை கணக்கீட்டு மாதத்தில் 59,497-லிருந்து 13.52 சதவீதம் சரிவடைந்து 51,454-ஆனது. இதேபோன்று, மூன்று சக்கர வாகன விற்பனையும் 58,651 என்ற எண்ணிக்கையிலிருந்து 52.75 சதவீதம் வீழ்ச்சியடைந்து 27,715-ஆனது.

நாட்டில் வேளாண் நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில், டிராக்டா் விற்பனை கடந்த டிசம்பரில் 35.49 சதவீதம் அதிகரித்து 69,105-ஆக உயா்ந்துள்ளது. இதன் விற்பனை 2019 டிசம்பரில் 51,004-ஆக காணப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 16,61,245 என்ற எண்ணிக்கையிலிருந்து 11.01 சதவீதம் உயா்ந்து 18,44,143-ஆனது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com