சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தில் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சம் கண்டது.
சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தில் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சம் கண்டது. இதனால்,  மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. 
உலகளாவிய சந்தை குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. சந்தை காலையில் எதிர்மறையாகத் தொடர்ந்தாலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பார்தி ஏர்டெல் ஆகியவை வெகுவாக உயர்ந்து சந்தை வலுப்பெறக் காரணமாக இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 197.47 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,253 பங்குகளில் 1,682 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,409 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 387 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 442 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது.  சந்தை மூலதன மதிப்பு ரூ.91 ஆ யிரம் கோடி உயர்ந்து  வர்த்தக முடிவில் ரூ.197.47  லட்சம் கோடியாக இருந்தது.
காளை ஆதிக்கம் தொடர்கிறது:  சென்செக்ஸ்  காலையில் 470 புள்ளிகள் கூடுதலுடன் 49,252.31-இல் தொடங்கியது.  வர்த்தகத்தின் போது 48,079.57 வரை கீழே சென்றது.  பின்னர், 49,569.14 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 247.79 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயர்ந்து 49,517.11-இல் நிலைபெற்றது.  
எஸ்பிஐ முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில்  14 பங்குகள் ஆதாயம் பெற்றன.16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பாரம்பரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 3.65 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியவை முறையே 3.41 மற்றும் 3.14 சதவீதம் உயர்ந்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி,  ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தன.
ஏசியன் பெயிண்ட் வீழ்ச்சி: அதே சமயம், ஏசியன்பெயிண்ட் 3.93 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே இந்தியா, டைட்டன், சன்பார்மா, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டி ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...:  தேசிய பங்குச் சந்தையில் 924 பங்குகள் ஆதாயம் பெற்றன.824 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 78.70 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயர்ந்து 14,563.45-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 14,590.65 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.  நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன.  நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 5.97 சதவீதம், ரியால்ட்டி 2.76 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆனால், எஃப்எம்சிஜி, ஐடி, பார்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com