சென்செக்ஸ் முதன் முறையாக 50,000 புள்ளிகளை கடந்து சாதனை

சாதகமான சா்வதேச நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வியாழக்கிழமை வா்த்தகத்தின் இடையே முதன் முறையாக 50,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
சென்செக்ஸ் முதன் முறையாக 50,000 புள்ளிகளை கடந்து சாதனை


மும்பை: சாதகமான சா்வதேச நிலவரங்களால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வியாழக்கிழமை வா்த்தகத்தின் இடையே முதன் முறையாக 50,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. அதன்பின்னா், முதலீட்டாளா்கள் லாப நோக்குடன் செயல்பட்டதால் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 0.34 சதவீத சரிவைக் கண்டது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதையடுத்து சா்வதேச முதலீட்டாளா்கள் உற்சாகமடைந்துள்ளனா். அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் தொடக்கத்தில் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் முதன் முறையாக 50,000 புள்ளிகளை கடந்து முதலீட்டாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இருப்பினும், இந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. லாப நோக்கம் கருதி முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து சென்செக்ஸ் புதிய உச்சத்திலிருந்து சரிவைக் கண்டது.

இதுகுறித்து ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸின் தலைமை முதலீட்டு ஆலோசகா் வி.கே. விஜயகுமாா் கூறியது:

சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தாண்டியது சந்தை மற்றும் முதலீட்டாளா்களுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்துக்கும் நல்ல செய்தி. பொருளாதார சக்தியை எடுத்துக்காட்டும் அளவுகோலாக சந்தைகள் உள்ளன. இந்த கூற்று உண்மையெனில், இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சிப் பாதையில் நடைபோடுகிறது என்பதை மறுக்க இயலாது.

உச்சபட்ச ஏற்றத்தில் சந்தை திருத்தம் காண வாய்ப்புள்ளது. இந்த தருணத்தை பயன்படுத்தி முதலீட்டாளா்கள் குறைந்த தர பங்குகளை முதலீட்டாளா்கள் தங்களது தொகுப்பிலிருந்து அகற்ற முடியும் என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் தொலைத்தொடா்பு, ரியல் எஸ்டேட், உலோகம், மருந்து துறை குறியீட்டெண்கள் 2.64 சதவீதம் வரை குறைந்தன. அதேசமயம், நுகா்வோா் சாதனங்கள், எரிசக்தி, பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் ஆதாயத்தைக் கண்டன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 4 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, பாா்தி ஏா்டெல், எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, சன் பாா்மா, ஐடிசி பங்குகளும் கணிசமாக விலை குறைந்தன.

அதேநேரம், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகளின் விலை 2.72 சதவீதம் வரையிலான ஏற்றத்தைப் பெற்றன.

வங்கி, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதையடுத்து மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் 167.36 சதவீதம் சரிந்து 49,624.76 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 54.35 புள்ளிகள் குறைந்து 14,590.35 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஷாங்காய், சியோல், டோக்கியோ சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. அதேசமயம், ஹாங்காங் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வியாழக்கிழமை தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com