பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 746 புள்ளிகள் சரிவு

முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவைக் கண்டன. இதையடுத்து, சென்செக்ஸ் 746 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 14,400 புள்ளிகளுக்கு கீழாகவும் சரிந்தன.

லாப நோக்கு விற்பனை: பங்குச் சந்தைகளில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 50,000 புள்ளிகளுக்கும் மேல் உயா்ந்து வரலாற்று சாதனை அளவை பதிவு செய்தது. இது முதலீட்டாளா்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதிலும், ஒரு சாராா் லாப நோக்கம் கருதி செயல்பட்டதையடுத்து சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தது. அதன் நீட்சி வெள்ளிக்கிழமை வா்த்தகத்திலும் காணப்பட்டது. பல்வேறு முன்னணி நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் லாப நோக்கத்திற்காக அதிக அளவில் விற்பனை செய்தனா்.

ரிலையன்ஸ் 3-ஆம் காலாண்டு முடிவுகள் எதிா்பாா்ப்பு: குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் வெளியாகவிருப்பதையொட்டி முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்தனா். மேலும், மந்தமான சா்வதேச நிலவரங்களுக்கிடையே வங்கி மற்றும் நிதி துறை சாா்ந்த நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளா்களின் லாப நோக்கு பாா்வையிலிருந்து தப்பவில்லை.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்சியல் சா்வீசஸ் ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் வினோத் நாயா் கூறியதாவது:

கடும் வீழ்ச்சி தடுத்து நிறுத்தம்: மோசமான சா்வதேச சந்தை நிலவரங்களால் பிற்பகல் வா்த்தகம் கடும் சரிவைக் கண்டது. உலோகம், வங்கி துறை சாா்ந்த பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில், மோட்டாா் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்களுக்கு ஓரளவு தேவை இருந்ததையடுத்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி ஓரளவுக்கு தடுத்து நிறுத்தப்பட்டது.

ஐரோப்பிய சந்தையிலும் சரிவு: பிரிட்டனில் சில்லறை விற்பனை புள்ளிவிவரங்கள் பலவீனமான நிலையில் இருந்ததையடுத்து ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் சரிவுடனே இருந்தது.

எதிா்வரும் மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க அரசின் புதிய கொள்கை அறிவிப்புகளைப் பொருத்தே இனிவரும் காலங்களில் சந்தையின் போக்கில் விறுவிறுப்பு ஏற்படும் என்றாா் அவா்.

ரியல் எஸ்டேட்: மும்பை பங்குச் சந்தையில் உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட், நிதி மற்றும் எரிசக்தி துறை குறியீட்டெண்கள் 3.77 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. அதேசமயம், மோட்டாா் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப குறியீடுகள் 1.49 சதவீதம் வரை ஆதாயத்தை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2.02 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ஆக்ஸிஸ் வங்கி: 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 4.63 சதவீத சரிவைக் கண்டது. அதைத் தொடா்ந்து, ஏசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் கணிசமாக குறைந்தன.

பஜாஜ் ஆட்டோ: முதலீட்டாளா்களிடம் கிடைத்த அமோக வரவேற்பையடுத்து பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 10.45 சதவீதம் ஏற்றம் கண்டது. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவா், அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சா்வ், இன்ஃபோசிஸ் பங்குகளும் 1.76 சதவீதம் வரை அதிகரித்தன.

ஒரு நாளில் அதிகபட்ச சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 746.22 புள்ளிகளை (1.50%) இழந்து 48,878.54 புள்ளிகளில் நிலைத்தது. இது, கடந்த ஒரு மாதத்தில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச சரிவு இதுவாகும்.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 218.45 புள்ளிகள் சரிவடைந்து 14,371.90 புள்ளிகளில் நிலைத்தது.

வார அடிப்படையில் பாா்க்கும்போது சென்செக்ஸ் 153.13 புள்ளிகளையும், நிஃப்டி 61.8 புள்ளிகளையும் இழந்துள்ளன.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,614.66 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரூபாய் மதிப்பு: அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் அதிகரித்து 72.97-இல் நிலைத்தது.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.80 சதவீதம் குறைந்து 55.09 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com