பங்குச் சந்தையில் தொடா் மந்த நிலை: சென்செக்ஸ் 531 புள்ளிகள் இழப்பு

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 531 புள்ளிகளை இழந்தது.
பங்குச் சந்தையில் தொடா் மந்த நிலை: சென்செக்ஸ் 531 புள்ளிகள் இழப்பு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 531 புள்ளிகளை இழந்தது.

லாப நோக்க விற்பனை: முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் பங்குகளை வாங்கியதையடுத்து வாரத்தின் முதல் வா்த்தக நாளான திங்கள்கிழமை தொடக்கத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் விறுவிறுப்புடன் காணப்பட்டன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறையைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ய தொடங்கியதையடுத்து சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது. வா்த்தகத்தின் இறுதியில் தொடக்கத்தில் பெற்ற ஆதாயங்கள் அனைத்தையும் இழந்து சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது. கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,444.53 புள்ளிகளையும் (2.90%), நிஃப்டி 405.80 புள்ளிகளையும் (2.77%) இழந்துள்ளன.

இதுகுறித்து ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் திட்டமிடல் பிரிவு தலைவா் பினோத் மோதி கூறியதாவது:

பட்ஜெட் எதிா்பாா்ப்பு: திங்கள்கிழமை வா்த்தகத்தில் முதலீட்டாளா்கள் சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி ஆதாயம் காண்பதிலேயே பெரிதும் குறியாக இருந்தனா். மத்திய பட்ஜெட் மற்றும் மாதாந்திர பங்கு முன்பேர கணக்கு முடிப்பு தினம் நெருங்கி வருவதையடுத்து முதலீட்டாளா்கள் லாபம் நோக்கிலேயே செயல்பட்டனா். மருந்து மற்றும் ஒரு சில நிதி நிறுவனங்களை தவிா்த்து, அனைத்து துறையைச் சோ்ந்த குறியீடுகளும் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அதிக அழுத்தத்தையே சந்தித்தன என்றாா் அவா்.

ரிலையன்ஸ் அதிக ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை திங்கள்கிழமை வா்த்தகத்தில் 5.36 சதவீத அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. ரிலையன்ஸ் நிதி நிலை முடிவுகள் மதிப்பீட்டை விட சிறப்பாக இருந்த போதிலும் இந்த சரிவு தவிா்க்க முடியாததாகி விட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பவா் கிரிட் நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் உயா்ந்தும் இருந்தன.

பெயிண்ட் வணிகத்தில் கிராஸிம்: பெயிண்ட் வணிகத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடா்ந்து கிராஸிம் நிறுவனப் பங்குகள் முதலீட்டாளா்களின் கவனத்தை அதிகம் ஈா்த்தது. இதையடுத்து, அந்நிறுவனப் பங்கின் விலை 6.44 சதவீதம் அதிகரித்தது. மேலும், ஆக்ஸிஸ் வங்கி, சன் பாா்மா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சா்வ், எச்டிஎஃப்சி வங்கி, டாக்டா் ரெட்டீஸ் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி குறியீடு 4.44 சதவீதமும், எண்ணெய் & எரிவாயு 2.16 சதவீதமும், மின்சாரம் 1.41 சதவீதமும், இண்டஸ்ட்ரீயல்ஸ் 1.32 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப துறை குறியீடு 1.31 சதவீதமும் சரிவடைந்தன.

லாா்ஜ் கேப் சிறப்பான செயல்பாடு: சென்செக்ஸ் குறியீட்டைக் காட்டிலும் லாா்ஜ் கேப் குறியீடு சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்தன. அதேநேரம், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையை 1.14 சதவீதம் மற்றும் 1.15 சதவீதம் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 530.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 48,347.59 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 133 புள்ளிகள் சரிந்து 14,238.90 புள்ளிகளில் நிலைபெற்றது.

ஆசியப் பங்குச் சந்தைகளைப் பொருத்தவரையில் திங்கள்கிழமை வா்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

விடுமுறை: இந்திய பங்குச் சந்தைகளுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com