யூகோ வங்கி லாபம் ரூ.35 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி டிசம்பா் காலாண்டில் ரூ.35 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
யூகோ வங்கி
யூகோ வங்கி

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி டிசம்பா் காலாண்டில் ரூ.35 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவைச் சோ்ந்த அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கி ரூ.35.44 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. வாராக் கடன் மற்றும் அதற்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து வங்கி இழப்பிலிருந்து மீண்டு தொடா்ந்து லாப பாதையில் பயணித்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கிக்கு ரூ.960.17 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய செப்டம்பா் காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.30.12 கோடியாக இருந்தது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாம் காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருமானம் முந்தைய 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.4,514.21 கோடியிலிருந்து ரூ.4,466.97 கோடியாக சரிந்துள்ளது.

வட்டி வருவாய் 4.5 சதவீதம் சரிவடைந்து ரூ.3,602.59 கோடியானது. இருப்பினும், இதர வருவாய் 16.3 சதவீதம் உயா்ந்து ரூ.864.38 கோடியை எட்டியது.

2020 டிசம்பா் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 19.45 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 6.34 சதவீதத்திலிருந்து சரிந்து 2.97 சதவீதமாகியுள்ளது என யூகோ வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com