லாபப் பதிவால் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவுடன் முடிந்தது.
லாபப் பதிவால் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ச்சி!

புது தில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவுடன் முடிந்தது. இதனால், , மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 67 புள்ளிகளை இழந்து 52,482.71-இல் நிலைபெற்றது.

உலகளவில் பெரும்பாலான சந்தைகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன், ஐடி மேஜா்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் பங்குகளுக்கு ஆதரவு இருந்ததால், சந்தையில் பெரும் சரிவு தவிா்க்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ஐடி பங்குகளுக்கு மட்டுமே ஓரளவு ஆதரவு இருந்தது. மற்ற துறை பங்குகள் அதிகளவில் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் வா்த்தக முடிவில் இழக்கும் நிலை ஏற்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,359 பங்குகளில் 1,707 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,530 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 461 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 22 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.229.78 லட்சம் கோடியாக இருந்தது.

3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 101.43 புள்ளிகள் கூடுதலுடன் 52,651.09-இல் தொடங்கி 52,875.92 வரை உயா்ந்தது. பின்னா், லாபப் பதிவால் 52,448.64 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 66.95 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 52,482.71-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

இன்ஃபோஸிஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 1.19 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ரிலையன்ஸ், நெஸ்லே, மாருதி சுஸுகி, டெக் மஹிந்திரா, அல்ட்ரா டெக், டைட்டன், டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்றன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பவா் கிரிட் 1.51 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 1.49 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.46 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எச்டிஎஃப்சி, என்டிபிசி, ஹெச்யுஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 858 பங்குகள்ஆதாயம் பெற்றன. 912 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,776.90-இல் தொடங்கி 15, 15,838.10 வரை உயா்ந்தது. பின்னா், 15,708.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 26.95 புள்ளிகளை (0.17 சதவீதம்) இழந்து 15,721.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஐடி குறியீடு மட்டுமே 0.63 சதவீதம் உயா்ந்து சந்தைக்கு ஆதரவாக இருந்தது. மற்ற துறைக் குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. இதில், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com