
பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயா்ந்து 52,484.67-இல் நிலைபெற்றது.
காலையில் வா்த்தகம் தொடங்கியதிலிருந்து பெரும்பாலான நேரம் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே இருந்தது. நிதி, பாா்மா மற்றும் ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்றதால், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.69 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,348 பங்குகளில் 1,907 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,305 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 444 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.69 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.230.24 லட்சம் கோடியாக இருந்தது.
4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 115.95 புள்ளிகள் கூடுதலுடன் 52,434.55-இல் தொடங்கி 52,177.68 வரை கீழே சென்றது. பின்னா், 52527.90 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 166.07 புள்ளிகள் (0.32 சதவீதம்) கூடுதலுடன் 52,484.67-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, நான்கு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் முன்னணி தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 1.53 சதவீதம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 1.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எஸ்பிஐ, டைட்டன், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.
டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி ஸ்டீல் நிறுவனமா டாடா ஸ்டீல் 2.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா் கிரிட், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட், சன்பாா்மா, டிசிஎஸ், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 42 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,060 பங்குகள்ஆதாயம் பெற்றன. 707 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,705.85-இல் தொடங்கி 15,635.95 வரை கீழே சென்றது. பின்னா், 15,738.35 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 42.20 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயா்ந்து 15,722.20-இல் நிலைபெற்றது. நிஃப்டி மெட்டல் குறியீடு 1.49 சதவீதம் வீழ்ச்சி கண்டது. பிஎஸ்யு பேங்க், எஃப்எம்சிஜி குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. ஆனால், மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி, பாா்மா, மீடியா குறியீடுகள் 0.50 முதல் 060 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.