நலிவடையும் நிலையில் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழில்: பொதுமுடக்கத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 
நலிவடையும் நிலையில் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழில்: பொதுமுடக்கத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள நாச்சியார்கோவில் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகள் உலகப் புகழ் பெற்றவை.
 இந்த குத்துவிளக்குகளைத் தயாரிப்பதற்காக நாச்சியார்கோவில் கம்மாளர் தெரு, மேலத் தெரு, அய்யம்பாளையத் தெரு, சமத்தனார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 200 பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.
 இங்கு அரை அடி முதல் 7 அடி வரை பல்வேறு வடிவங்களில் பித்தளை குத்துவிளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் ஆறடி உயர குத்துவிளக்குகள் அரசு, தனியார் விழாக்களில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும்.
 நாச்சியார்கோவிலில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் தரமானது மட்டுமல்லாமல், கலை நுணுக்கமும், வேலைப்பாடுகளும் நிறைந்தது என்ற புகழும் இருக்கிறது. எனவே, தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலும் நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் விற்பனை அதிகம். மேலும், சிங்கப்பூர், மலேசியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 சுபமுகூர்த்த நாள்கள் அதிகம் நிறைந்த வைகாசி, ஆவணி, தை மாதங்களில் விற்பனை அதிகமாக இருக்கும். இதையொட்டி, ஆண்டு முழுவதும் நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் தயாராகி வருகின்றன.
 சராசரியாக ஒரு நாளைக்கு ஏறத்தாழ ரூ. 1 கோடி அளவுக்கு நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் வர்த்தகம் நடைபெறும். இதேபோல, தொழிலாளர்களுக்கும் நாள்தோறும் ஏறக்குறைய ரூ. 400 வீதம் கூலி கிடைத்து வந்தது. இதன்மூலம் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், இத்தொழிலைச் சார்ந்த மற்ற தொழில்களைச் சேர்ந்தவர்களுக்கும் சீரான வருவாய் கிடைக்கும்.
 இந்த நிலைமை 2019 ஆம் ஆண்டு வரை இருந்து வந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பரவல் காரணமாகப் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில்களில் ஏற்பட்டதைப் போல, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், இத்தொழில் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு அக்டோபர் மாதத்தைக் கடந்துவிட்டது. என்றாலும், 50 - 70
 சதவீதம்தான் வர்த்தகம் இருந்து வந்தது.
 இந்நிலையில், கரோனா இரண்டாவது அலை காரணமாக மே மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், இத்தொழில் மீண்டும் முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதனால் இரு மாதங்களாக உற்பத்தி இல்லாததால், இதைச் சார்ந்த உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட காரணங்களால் இழப்புகள் ஏற்பட்டதால், ஏராளமான பட்டறைகள் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில், கடந்தாண்டு கரோனா பொதுமுடக்கத்திலிருந்து மேலும் பல பட்டறைகள் திறக்கப்படவில்லை. உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் விவசாயம், கூலி வேலை உள்ளிட்ட மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
 இதுகுறித்து நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தியாளர் சங்கத் துணைச் செயலர் ஜி. ரமேஷ் தெரிவித்தது:
 இத்தொழிலில் ஜி.எஸ்.டி., இடைத்தரகர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் பல உற்பத்தியாளர்கள் சொத்துகளை இழந்துவிட்டனர். இந்நிலையில், கடந்தாண்டிலிருந்து பொதுமுடக்கம் காரணமாக ஏறத்தாழ 200 பட்டறைகள் இருந்த நிலையில், தற்போது 47 பட்டறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதனால், இத்தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது.
 எனவே, அரசே நேரடியாக நாச்சியார்கோவில் குத்துவிளக்குகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், உற்பத்தியாளர்களுக்கும் தொடர்ச்சியாக வேலை கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றார் ரமேஷ்.
 பொதுமுடக்கத் தளர்வைத் தொடர்ந்து, நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், மீண்டும் பழைய நிலையை எட்டுவது எப்போது எனத் தெரியவில்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
 இத்தொழிலை நம்பி உள்ள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களில் பலர் தனியாரிடம் கடனுதவி பெற்றுள்ளனர். தற்போது, இரு மாதங்களாக வருவாய் இல்லாததால், கடன் தவணை செலுத்த முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, நலிவடையும் நிலையில் உள்ள இத்தொழிலை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் உள்ளனர்.
 -வி.என்.ராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com