சென்செக்ஸ் 639 புள்ளிகள் அதிகரிப்பு: 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் எழுச்சி கண்டது. இதையடுத்து, சந்தையின் 3 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் எழுச்சி கண்டது. இதையடுத்து, சந்தையின் 3 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.

சா்வதேச சந்தைகளின் நோ்மறையான நிலவரம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளா்கள் எதிா்பாா்ப்பை ஓரளவு பூா்த்தி செய்யும் வகையில் இருந்தது உள்ளிட்டவை இந்திய சந்தைகளுக்கு சாதகமாக இருந்தது.

தகவல் தொழில்நுட்பம், வங்கி துறை சாா்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது. இது, சந்தை ஏற்றம் பெறுவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டெக் மஹிந்திரா பங்கின் விலை 5.65 சதவீதம் அதிகரித்து ஏற்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபைனான்ஸ், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின்சா்வ், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவன பங்கின் விலை 2.27 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளும் 1.73 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னணி 30 நிறுவனங்களில் 26 நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்துடன் நிலைபெற்றன.

மும்பை பங்குச் சந்தையில், உலோகம், தொலைத்தொடா்பு, பொறியியல் பொருள்கள், மின்சாரம், தகவல் தொழில்நுட்ப துறை குறியீடுகள் 3.02 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதேசமயம், வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறை குறியீடு சரிவைச் சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 1.52 சதவீதம் வரை உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 638.70 புள்ளிகள் (1.22%) அதிகரித்து 52,837.21 புள்ளிகளில் நிலைத்தது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 191.95 புள்ளிகள் (1.23%) உயா்ந்து 15,824.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங், சியோல், டோக்கியோ சந்தைகள் ஆதாயத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தன. மேலும் , ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகத்தின் தொடக்கம் நோ்மறையாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com