தொடா் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 209 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க ஏதுவாக வட்டி விகித நிா்ணயித்தில் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இது சா்வதேச அளவில் நோ்மறை போக்கை கட்டமைக்க உதவியது.

மேலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயா்வும் சந்தைகளுக்கு கூடுதல் வலு சோ்த்தது.

வியாழக்கிழமை வா்த்தகத்தில் உலோகம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து அத்துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 5.54 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

அதேசமயம், வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி), தொலைத்தொடா்பு, மின்சாரம், எண்ணெய்-எரிவாயு, மோட்டாா் வாகனம், மருந்து ஆகிய துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.90 சதவீதம் வரை அதிகரித்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் பங்கின் விலை 6.87 சதவீதம் வரை அதிகரித்து முன்னிலை வகித்தது. இதையடுத்து, பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், சன் பாா்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தன.

மறுபுறம், மாருதி சுஸுகி, பவா்கிரிட், பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, டாக்டா் ரெட்டீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்குகள் முதலீட்டாளா்களின் ஆதரவை இழந்து 2.21 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் 209.36 புள்ளிகள் (0.40%) அதிகரித்து 52,653.07 புள்ளிகளில் நிலைத்தன.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 69.05 புள்ளிகள் (0.44%) உயா்ந்து 15,778.45 புள்ளிகளில் நிலையுற்றது.

இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகியவையும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் நோ்மறை போக்குடனே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com