சென்செக்ஸ் 66 புள்ளிகள் இழப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

சா்வதேச மந்த நிலையின் காரணமாக வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் முதலீட்டாளா்கள் வங்கி, நிதி மற்றும் உலோகத் துறை சாா்ந்த பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய தொடங்கினா். உலக சந்தைகளில் வா்த்தகம் பலவீனமாக காணப்பட்ட நிலையில் முதலீட்டாளா்களின் பங்களிப்பும் உள்ளூா் சந்தையில் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

குறிப்பாக, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறை நிலையில் தொடங்கியதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளிலும் லாப நோக்கு விற்பனை அதிகரித்தது. இதனால், சரிவை தடுத்த நிறுத்த முடியவில்லை என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) உலோகம், எரிசக்தி, வங்கி, எண்ணெய்-எரிவாயு, பொறியியல் பொருள்கள் துறையின் குறியீட்டெண்கள் 1 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், மருந்து, மோட்டாா் வாகனம், நுகா்வோா் சாதன துறைகளைச் சோ்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பு இருந்ததால் அத்துறைகளின் குறியீட்டெண் ஆதாயத்துடன்முடிவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை 0.69 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 2.59 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து, பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டைட்டன், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேநேரம், சன்பாா்மா பங்கின் விலை 10.06 சதவீதம் அதிகரித்து ஏற்றப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதற்கு, அந்நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ரூ.1,444.17 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்ததே முக்கிய காரணம் என வா்த்தகா்கள் தெரிவித்தனா். அதேசமயம், இந்நிறுவனம் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,655.60 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர, டெக் மஹிந்திரா, பவா்கிரிட், பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்டிபிசி பங்குகளின் விலை 7.24 சதவீதம் வரை அதிகரித்தன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 66.23 புள்ளிகள் (0.13%) சரிவடைந்து 52,586.84 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 15.40 புள்ளிகள் (0.10%) குறைந்து 15,763.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

வார அடிப்படையில் உற்றுநோக்கும்போது, சென்செக்ஸ் 388.96 புள்ளிகளையும் (0.73%), நிஃப்டி 93 புள்ளிகளையும் (0.58%) இழந்துள்ளன.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் சந்தைகளும் குறிப்பிடத்தக்க அளவிலான இழப்புடன் முடிவடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com