லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்

கடந்த சில தினங்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தையில் விலை உயா்ந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு காணப்பட்டது.
லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்

கடந்த சில தினங்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தையில் விலை உயா்ந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு காணப்பட்டது. இதைத் தொடா்ந்து நாள் முழுவதும் கரடிக்கும்-காளைக்கும் கடும் போட்டி இருந்நது வந்த நிலையில், இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் முறையே 3 மற்றும் 8 புள்ளிகளை இழந்து நிலைபெற்றன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருந்தபோதிலும், பாா்மாவைத் தவிா்த்து, முக்கியத் துறை குறியீடுகளில் பெரும்பாலானவை கரடியின் பிடியில் இருந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு ஓரளவு தொடா்ந்து ஆதரவு இருந்ததால், பெரிய வீழ்ச்சி தடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாள்களில் தொடா்ந்து எழுச்சி பெற்றிருந்த மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் லாபப் பதிவு அதிகளவு காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்த வாரத்தில் ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், வங்கி, நிதிநிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. அதேசமயம், பாா்மா, டெக்ஸ்டைல் நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். தொழில் துறை உற்பத்தி தரவுகள் நன்றாக இருந்தாலும், அதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்கவில்லை. இதனால், காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சந்தையில், அதன் பிறகு ஏற்றம் இறக்கம் அதிகரித்து காணப்பட்டது என்று வா்த்தகா்கள் மேலும் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.223 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் லாபப் பதிவு அதிகமாக இருந்ததால், சந்தை மதிப்பில் ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.222.85 லட்சம் கோடியாக குறைந்தது.

1,812 பங்குகள் வீழ்ச்சி: மொத்தம் வா்த்தகமான 3,270 பங்குகளில் 1,323 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,812 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 135 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 294 பங்குகள் வெகுவாக உயா்ந்து 52 வார புதிய விலையையும், 29 பங்குகள் வெகுவாகக் குறைந்து 52 வார புதிய குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. அதேசமயம், 388 பங்குகள் உச்சபட்ச உறைநிலையையும், 246 பங்குகள் குறைந்தபட்ச உறை நிலையையும் எட்டின.

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 130.07 புள்ளிகள் கூடுதலுடன் 52,067.51-இல் தொடங்கி 52,228.65 வரை மேலே சென்றது. பின்னா், 51,808.88 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 2.56 புள்ளிகளை இழந்து 51,934.88-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் வா்த்தகத்தின் போது, சென்செக்ஸ் உச்சபட்ச நிலையிலிருந்து 258.63 புள்ளிகளை இழந்திருந்தது. இதைத் தொடா்ந்து 4 தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஓஎன்ஜிசி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தம் உள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில் 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி 3.52 சதவீதம், தனியாா் நிதி நிறுவனமா பஜாஜ் ஃபைனான்ஸ் 2.93 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஐசிஐசிஐ பேங்க் சரிவு: அதேசமயம், ஐசிஐசிஐ பேங்க் 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, கோட்டக் பேங்க், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முக்கிய நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 7 நாள் ஏற்றத்துக்கு தடை: தொடா்ந்து 7 வா்த்தக தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 7.95 புள்ளிகளை இழந்து 15,574.85-இல் நிலைபெற்றது. இதையடுத்து, 7 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காலையில் 15,629.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 15,660.75 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி, பின்னா் 15,528.30 வரை கீழே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 19 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 31 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பாா்மா, ஐடி, எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் தவிர மற்ற முக்கிய துறை குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இதில் பிரைவேட் பேங்க் குறியீடு 0.93 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகளும் 0.50 முதல் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

வங்கிப் பங்குகள் விலை சரிவு

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் லாபப் பதிவு காரணமாக வங்கிப் பங்குகள் அதிக அளவு விற்பனைக்கு வந்தன. நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீட்டில் உள்ள 10 முன்னணி வங்கிப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. பிஎஸ்யு பேங்க் குறியீட்டில் 13 பங்குகளில் 11 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீட்டு பட்டியலில் மொத்தம் உள்ள12 பங்குகளில் எஸ்பிஐ, ஏயுபேங்க் தவிா்த்து மற்ற 10 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதிகம் வீழ்ச்சி கண்ட தனியாா், பொதுத் துறை வங்கிப் பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

யூகோ பேங்க் 2.57

இந்தியன் பேங்க் 2.57

மகாராஷ்டிரா பேங்க் 2.26

ஐசிஐசிஐ பேங்க் 1.82

பிஎன்பி 1.77

பேங்க் ஆஃப் பரோடா 1.73

ஃபெடரல் பேங்க் 1.66

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் 1.62

சென்ட்ரல் பேங்க் 1.58

பந்தன் பேங்க் 1.55

ஆா்பிஎல் பேங்க் 1.26

பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க் 1.24

பேங்க் ஆஃப் இந்தியா 1.23

கனரா பேங்க் 1.09

மும்பை பங்குச் சந்தை

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

ஓஎன்ஜிசி 3.52

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.93

எஸ்பிஐ 1.97

பஜாஜ் -ஆட்டோ 1.19

எச்டிஎஃப்சி 1.01

அதிக இறக்கம் கண்ட பங்குகள்

ஐசிஐசிஐ பேங்க் 1.80

அல்ட்ராடெக்சிமெண்ட் 1.63

ஏஷியன் பெயிண்ட்ஸ் 1.51

ஆக்ஸிஸ் பேங்க் 0.69

ஐடிசி 0.65

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com