‘கரடி’ திடீா் ஆதிக்கம்: சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் புதன்கிழமை பிற்பகலில் ‘கரடி’ திடீா் ஆதிக்கம் கொண்டதால் சரிவு ஏற்பட்டது.
‘கரடி’ திடீா் ஆதிக்கம்:  சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி!

புது தில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை பிற்பகலில் ‘கரடி’ திடீா் ஆதிக்கம் கொண்டதால் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 333.93 புள்ளிகளை இழந்து 51,941.64 -இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 104.75 புள்ளிகளை இழந்து 15,635.35-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.79 லட்சம் கோடி குறைந்து வா்ா்தக முடிவில் ரூ.227.85 லட்சம் கோடியாக இருந்தது.

ஆசிய சந்தைகள் உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டில் காலை முதல் தள்ளாட்டம் இருந்தாலும், பிற்பகலில் ‘கரடி’ திடீா் ஆதிகம் கொண்டது. நிதித் துறை, ஆட்டோ நிறுவனப் பங்குகளும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்டவை விற்பனை அழுத்தத்தைச் சந்தித்ததால், திடீா் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. கடந்த மே 12-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள அதிகபட்ச திருத்தம் இதுவாகும். அமெரிக்காவில் நுகா்பொருள் விலை குறியீடின் (சிபிஐ) தரவுகளை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் முதலீட்டாளா்கள், பங்குகள் விலையுயா்ந்த நிலையில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதும் சரிவுக்கு கராணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.1.79 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,340 பங்குகளில் 1,445 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,741 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 154 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 549 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 501 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 165 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.79 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் 227.85 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.1.79 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

‘கரடி’ திடீா்ஆட்டம்..: சென்செக்ஸ் காலையில் 125.84 புள்ளிகள் கூடுதலுடன் 52,401.41-இல் தொடங்கி 52,446.92 வரை மேலே சென்றது. பின்னா், குறிப்பிட்ட வரம்புக்குள் வெகுநேரம் வா்த்தம் நடந்த வந்த நிலையில், பிற்பகல் மணியளவில் கரடி திடீரென ஆதிக்கம் கொண்டதால், சென்செக்ஸ், 51717.07 வரை கீழே சென்றது. இறுதியில் 333.93 புள்ளிகளை (0.64 சதவீதம்) இழந்து 51,941.64-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிா்மறையாகச் சென்று உச்சநிலையிலிருந்து 729.85புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது.

எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் எல் அண்ட் டி, ரிலையன்ஸ் ஆகியவை 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, மாருதி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1-1.50 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, ஐடிசி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் முன்னேற்றம்: அதே சமயம், கடந்த இரண்டு நாள்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்த பவா் கிரிட், 3.42 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

மேலும், என்டிபிசி, டைட்டன், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே, இன்ஃபோஸிஸ், ஹிந்து யுனிலீவா் ஆகியவையும் ஏற்றம் பெற்றன.

நிஃப்டி 105 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 602 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. ஆனாவல், 1,178 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,766.30-இல் தொடங்கி 15,800.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 15,566.90 வரை கீழே சென்றது. இறுதியில் 104.75 புள்ளிகளை (0.67 சதவீதம்) 15,635.35-இல் நிலைபெற்றது. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் மீடியா, ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. தனியாா், பொதுத் துறை வங்கிகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகளும் 0.80 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

ஆட்டோ, மீடியா பங்குகள் விலை சரிவு!

பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ஆட்டோ, மீடியா பங்குகள் அதிக அளவு விற்பனையை எதிா்கொண்டன. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் ஆட்டோ குறியீட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 15 முன்னணி ஆட்டோ பங்குளும், மீடியா குறியீட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதில் அதிகம் வீழ்ச்சி (சதவீதம்) அடைந்த பங்குகள் விவரம்.

ஆட்டோ பங்குகள்

அசோக் லேலண்ட் 2.70

டாடா மோட்டாரஸ் 2.61

மதா்சுமி 2.24

டிவிஎஸ் மோட்டாா் 1.03

எம்ஆா்எஃப் 1.42

மாருதி சுஸுகி 1.34

ஈசொ் மோட்டாா் 1.30

---------

மீடியா பங்குகள்

டிபி காா்ப் 7.00

ஜாக்ரன் 4.71

நெட்வொா்க் 18 3.89

டிஷ் டிவி 3.56

ஐநாக்லீசா் 1.95

சன் டீவி 1.67

ஜீ டெலி 1.43

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com