நாட்டின் ஏற்றுமதி 771 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 771 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,000 கோடி) ஏற்றம் கண்டுள்ளது.
நாட்டின் ஏற்றுமதி 771 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 771 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,000 கோடி) ஏற்றம் கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட முதல்கட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

ஆரோக்கியமான வளர்ச்சி: பொறியியல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்ததன் காரணமாக ஜூன் 1 முதல் 7-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 771 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் ஏற்றுமதி அளவைக் காட்டிலும் 52.39 சதவீதம் அதிகமாகும். 

இறக்குமதி அதிகரிப்பு: ஜூன் 1-7 காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியும் 83 சதவீதம் உயர்ந்து 910 கோடி டாலரைத் தொட்டுள்ளது. 

நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பொறியியல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி கணக்கீட்டு வாரத்தில் முறையே 59.7 சதவீதம் அதிகரித்து 74.11 கோடி டாலர், 96.38 சதவீதம் உயர்ந்து 29.78 கோடி டாலர், 69.53 சதவீதம் ஏற்றம் கண்டு 53.06 கோடி டாலர் என்ற அளவை எட்டிப்பிடித்துள்ளன.

எதிர்மறை வளர்ச்சி: இருப்பினும், இரும்புத்தாது, எண்ணெய் வித்துக்கள், நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி ஜூன்1-7 காலகட்டத்தில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன.

இந்த காலகட்டத்தில் இறக்குமதியைப் பொருத்தவரையில் பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 135 சதவீதம் அதிகரித்து 109 டாலராக எகிறியுள்ளது. 

அதேபோன்று, மின்னணு பொருள்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றின் இறக்குமதி முறையே 45.85 சதவீதம் உயர்ந்து 32.47 கோடி டாலர் மற்றும் 111 சதவீதம் அதிகரித்து 29 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன. 

அமெரிக்கா: நடப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே 60 சதவீதம் அதிகரித்து 50 கோடி டாலர், 57.86 சதவீதம் உயர்ந்து 17.30 கோடி டாலர், 212 சதவீதம் ஏற்றம் கண்டு 16.63 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன. 

அதேபோன்று, சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டின் இறக்குமதி முறையே 90.94 சதவீதம் அதிகரித்து 80.95 கோடி டாலர், 89.45 சதவீதம் உயர்ந்து 41.06 கோடி டாலர், 164.55 சதவீதம் அதிகரித்து 40 கோடி டாலர் என்ற அளவில் காணப்பட்டன. 

பெட்ரோலியப் பொருள்கள்: இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டின் மே மாதத்தில் 67.39 சதவீதம் முன்னேற்றம் கண்டு 3,221 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.41 லட்சம் கோடி)  இருந்தது. இதற்கு, பொறியியல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி  கணிசமான அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம் என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில்  தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com