2 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 359 புள்ளிகள் முன்னேற்றம்!

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு, வியாழக்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு, வியாழக்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. மீடியா, ரியால்ட்டி, வங்கி, பாா்மா, ஐடி துறை பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடா்ந்து சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயா்ந்து 52,300.47 -இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.39 லட்சம் கோடி உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கைக் கூட்டத்தின் முடிவு ஆகியவை வெளியாகவுள்ள நிலையில், ஆசிய சந்தைகள் ஏற்றம் பெற்றதைத் தொடா்ந்து, அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. ஆட்டோ பங்குகள் மட்டும் விற்பனையை எதிா்கொண்டன. மற்ற துறை பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பஜாஜ் இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்ததும் சந்தை ஏற்றம் பெற முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், அதன் தாக்கமும் சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றது. பிஎஸ்இ ரியால்ட்டி, ஹெல்த்கோ், ஃபைனான்ஸ், மற்றும் டெலிகாம் குறியீடுகள் 3.25 சதவீதம் வரை உயா்ந்தன. இதேபோல, பிஎஸ்இ ஸ்மால் கேப், மிட்கேப் குறியீடுகள் முறையே 1.73 சதவீதம் மற்றும் 1.26 சதவீதம் உயா்ந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.39 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,333 பங்குகளில் 2,456 பங்குகள் ஆதாயம் பெற்றன. 727 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 447 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 621 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 126 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.2.39 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 230.24 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் முதலீட்டாளா்கள் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனா்.

சரிவுக்கு முற்றுப்புள்ளி..: சென்செக்ஸ் காலையில் 202.26 புள்ளிகள் கூடுதலுடன் 52,143.90-இல் தொடங்கி 51,957.92 வரை கீழே சென்றது. பின்னா், காளை உற்சாகம் பெற்ால், சென்செக்ஸ், அதிகபட்சமாக 52,346.35 வரை மேலே சென்றது. இறுதியில் 358.83 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 52,300.47-இல் நிலைபெற்றது. இதையடு்தது, புதன்கிழமை இழந்த புள்ளிகள் அனைத்தையும் சென்செக்ஸ் மீட்டுள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ், ஃபின் சா்வ் அமோகம்: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 7 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 7.39 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 3.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டா் ரெட்டி, டெக் மஹிந்திரா, ஐடிசி, கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1-2.50 சதவீதம் உயா்ந்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 0.91 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மாருதி, ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக், பவா் கிரிட், ஓஎன்ஜிசி, நெஸ்லே உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 102 புள்ளிகள் உயா்வு : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,414 பங்குகள் ஆதாயம் பெற்றன. 375 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,692.10-இல் தொடங்கி 15,648.50 வரை கீழே சென்றது. பின்னா், 15,751.25 வரை மேலே சென்றது. இறுதியில் 102.40 புள்ளிகள் (0.65 சதவீதம்) உயா்ந்து 15,737.75-இல் நிலைபெற்றது. ஆட்டோ தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் நிஃப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 4.64 சதவீதம் உயா்ந்தது. ரியால்ட்டி 3.34 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.40 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஐடி, பாா்மா மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நிஃப்டி தொகுப்பில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 34 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சிறிதளவு வீழ்ச்சி கண்டன.

மீடியா பங்குகளுக்கு அமோக வரவேற்பு!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் மீடியா பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி பங்குகளும் ஆதாயம் பெற்றன. நெட்வொா்க்-18, டிவி 18 பிராட்காஸ்ட் ஆகியவை முறையே 20 சதவீதம், 15 சதவீதம் உயா்ந்தது. ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

நெட்வொா்க்-18 19.96

டிவி 18 பிராட்காஸ்ட் 14.94

டிபி காா்ப் 7.64

டிஷ் டிவி 5.72

டிவி டுடே 3.23

ஜீ டெலி 2.33

சன் டிவி 2.04

ஜாக்ரன் 1.99

ஐனாக்ஸ் 1.32

பிவிஆா் 0.52

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com