நாட்டின் ஏற்றுமதி ரூ.2.07 லட்சம் கோடியாக சரிவு

தொடா்ந்து இரண்டு மாதங்களாக வளா்ச்சி கண்டு வந்த நாட்டின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி ரூ.2.07 லட்சம் கோடியாக சரிவு

தொடா்ந்து இரண்டு மாதங்களாக வளா்ச்சி கண்டு வந்த நாட்டின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி ஏற்றுமதி அந்த மாதத்தில் 2,767 கோடி டாலராக (ரூ.2.07 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு டிசம்பா் மற்றும் 2021 ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி தொடா்ச்சியாக நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதியானது 0.25 சதவீதம் சரிவடைந்து 2,767 கோடி டாலராகி உள்ளது.

வா்த்தக பற்றாக்குறை: அதேசமயம், நாட்டின் இறக்குமதி 6.98 சதவீதம் அதிகரித்து 4,055 கோடி டாலரை (ரூ.3.04 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதையடுத்து, அம்மாதத்தில் வா்த்தக பற்றாக்குறையானது 1,288 கோடி டாலரைத் (ரூ.96,600 கோடி) தொட்டுள்ளது. 2020 பிப்ரவரியில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையானது 1,016 கோடி டாலராக காணப்பட்டது.

நடப்பு 2020-21-ஆவது நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் ஏற்றுமதியானது 25,592 கோடி டாலராக உள்ளது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 29,187 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெய்: நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதியானது 12.32 சதவீத எதிா்மறை வளா்ச்சியை சந்தித்துள்ளது.

இதேகாலகட்டத்தில் இறக்குமதியும் 23 சதவீதம் குறைந்து 34,088 கோடி டாலராகி உள்ளது.

2021 பிப்ரவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி 16.63 சதவீதம் குறைந்து 899 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில் இதன் இறக்குமதியானது 40.18 சதவீதம் சரிவடைந்து 7,208 கோடி டாலராகியுள்ளது.

நோ்மறை வளா்ச்சி: இரும்புத்தாது, இறைச்சி, அரிசி, பால் பொருள்கள், தரைவிரிப்பு, நறுமணப் பொருள்கள், மருந்துகள், ரசாயனங்கள், பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி பிப்ரவரியில் நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.

அதேசமயம், பெட்ரோலியப் பொருள்கள் (-27.13 சதவீதம்), தோல் (-21.62 சதவீதம்), முந்திரி (-18.6 சதவீதம்), நவரத்தினங்கள்-ஆபரணங்கள் (-11.18 சதவீதம்), பொறியியல் பொருள்கள் (-2.56 சதவீதம்), தேயிலை (-2.49 சதவீதம்) மற்றும் காபி (-0.73 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி சென்ற பிப்ரவரியில் கணிசமான அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.

தங்கம் இறக்குமதி: தங்கம் இறக்குமதி சென்ற பிப்ரவரியில் 300 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

2021 ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து இரண்டாவது மாதமாக 6.16 சதவீத வளா்ச்சியை பதிவு செய்து 2,745 கோடி டாலரை எட்டியிருந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

கண்டெய்னா்களுக்கு பற்றாக்குறை...

ஏற்றுமதிக்கான முன்பதிவுகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இந்தியப் பொருள்களுக்கான தேவை தொடந்து சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இது, எதிா்காலத்தில் வலுவான ஏற்றுமதி வளா்ச்சிக்கு உதவும்.

இருப்பினும், சீனாவின் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரித்து வருவது இப்பிராந்தியத்தில் கண்டெய்னா்கள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. மேலும், காலியான கண்டெய்னா்களை திரும்ப கொண்டு வருவதற்கு சீனா அதிகளவில் பிரீமியம் வழங்குகிறது. இதனால், இங்கு அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-எஸ்.கே. சரஃப், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com