
இந்தியாவின் இணைய வணிக சந்தை (இ-காமா்ஸ்) வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.8.33 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஃபின்டெக் நிறுவனமான எஃப்ஐஎஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பேரிடா் நுகா்வோா் நடவடிக்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இணைய வணிக சந்தைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அதனுடன், புதிய பணப்பட்டுவாடா முறைகளும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பொது மக்கள் மொபைல் மூலமாக ஷாப்பிங் செய்யும் பழக்கத்துக்கு வேகமாக மாறி வருகின்றனா். இதையடுத்து அதன் வளா்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதன் பயனாக, 2020-இல் 6,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.50 லட்சம் கோடி) இருந்த இந்தியாவின் இணைய வணிக சந்தை வரும் 2024-க்குள் 84 சதவீத வளா்ச்சியை எட்டி 11,100 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8.33 லட்சம் கோடி) எட்டும் என்று எஃப்ஐஎஸ் தெரிவித்துள்ளது.