நிதித் துறைப் பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் வீழ்ச்சி தொடர்கிறது

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை கடும் எதிர்மறையாக முடிந்தது
நிதித் துறைப் பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் வீழ்ச்சி தொடர்கிறது

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை கடும் எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 31.12 புள்ளிகள் குறைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் வீழ்ச்சி மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த போதிலும், காலையில் எழுச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை வர்த்தக முடியும் தறுவாயில் நஷ்டத்தைச் சந்தித்தன. வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் அதிகளவு விற்பனைக்கு வந்ததே இதற்கு முக்கியக் காரணம். இருப்பினும், ஐடி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதும், பத்திரச் சந்தைகளின் நிலையற்ற போக்கு, உயர்ந்து வரும் பணவீகம் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளைப் பெரிது பாதித்துள்ளதால் லாபப் பதிவு தொடர்கிறது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.207.28 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்கமான 3,138 பங்குகளில் 1,466 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,497 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 175 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 241 பங்குகள் வெகுவாக உயர்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 31 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 328 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்ற உயர்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 229 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையை எட்டியுள்ளன.
 மூன்றாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 213.34 புள்ளிகள் கூடுதலுடன் 50,608.42-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,857.98 வரை உயர்ந்தது. பின்னர் 450,289.44 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 31.12 புள்ளிகள் (0.06 சதவீதம்) இழப்புடன் 50,363.96-இல் நிலைபெற்றது.
 ஏசியன் பெயிண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் மட்டுமே ஆதாய பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட் 4.87 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாக்டர் ரெட்டி 2.44 சதவீதம் உயர்ந்தது. மேலும், ஹிந்து யுனி லீவர், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, பார்தி ஏர்டெல், மாருதி சுஸுகி ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 எல் அண்ட் டி வீழ்ச்சி: அதே சமயம், எல் அண்ட் டி 1.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ் ஆகியவை 0.75 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 821 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 911 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 19.05 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 14,910.45-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 15,051.60 வரை உயர்ந்திருந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 14,890.65 வரை கீழே சென்றது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. டெக் மகேந்திரா மாற்றமின்ற் ரூ.1,026.70 இல் நிலைபெற்றது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள்1 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஐடி குறியீடு 1.27 சதவீதம், எஃப்எம்சிஜி 0.89 சதவீதம் உயர்ந்தன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com