
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி சென்ற பிப்ரவரி மாதத்தில் 27 சதவீதம் குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முந்தைய இரண்டு மாதங்களில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் தேவையில் காணப்பட்ட மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக சென்ற பிப்ரவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதி 3,94,495 டன்னாக குறைந்தது. இது, 2020 பிப்ரவரியில் இறக்குமதியான 5,40,470 டன் பாமாயிலுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 பிப்ரவரியில் தாவர எண்ணெய் வகைகளின் ஒட்டுமொத்த இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11,12,478 டன்னிலிருந்து 25 சதவீதம் சரிவடைந்து 8,38,607 டன் ஆனது. இதில், 7,96,568 டன் சமையல் எண்ணெயும், 42,039 டன் சமையல் சாரா எண்ணெயும் அடங்கும்.
2020 நவம்பா் முதல் 2021 பிப்ரவரி வரையிலான நான்கு மாதங்களில் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 45,63,791 டன்னிலிருந்து 3.7 சதவீதம் குறைந்து 43,94,760 டன்னாக இருந்தது.
சா்வதேச சந்தையில் சூரியகாந்தி எண்ணெயின் விலை மிகவும் அதிகரித்திருந்த காரணத்தால் அதன் இறக்குமதி சரிவடைந்தது. இதனால், நுகா்வோா் அந்த எண்ணெய்க்கு மாற்றாக சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்கு மாறினா்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரியில் ஆா்பிடி பாமாயில் இறக்குமதி 33,677 டன்னிலிருந்து 6,000 டன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று கச்சா பாமாயில் (சிபிஓ) இறக்குமதியும் 4,88,354 டன்னிலிருந்து 3,83,995 டன்னாக குறைந்துபோனது.
இவைதவிர, சென்ற பிப்ரவரியில் கொ்னல் எண்ணெய் (சிபிகேஓ) இறக்குமதியும் 18,439 டன்னிலிருந்து வெறும் 4,500 டன்னாக வீழ்ச்சியடைந்தது. மேலும், சாஃப்ட் ஆயில் எனப்படும் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி நடப்பாண்டு பிப்ரவரியில் முறையே 2,85,973 டன் மற்றும் 1,16,100 டன்னாக சரிந்தன.
அதேசமயம், 2020 பிப்ரவரியில் இவற்றின் இறக்குமதி முறையே 2,26,743 டன் மற்றும் 3,22,448 டந் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டன என்று எஸ்இஏ தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு பாமாயில் விநியோகம் செய்வதில் இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...