4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 984 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 983.58 புள்ளிகளை இழந்து 48,782.36-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 263.80 புள்ளிகளை இழந்து 14,631.10-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, 4 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்தது. மேலும், ஆசிய பங்குச் சந்தைககளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து பலவீனத்துடன் தொடங்கி நாள் முழுவதும் எதிா்மறையாகவே வா்த்தகம் இருந்து வந்தது. கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் வேளையில், மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாா்மா தவிர மற்ற துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன. இதனால், கடும் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.2.03 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,115 பங்குகளில் 1,353 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,590 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 222 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 270 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 193 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.02 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.207.03 லட்சம் கோடியாக இருந்தது.

கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 405.05 புள்ளிகள் குறைந்து 49,360.89-இல் தொடங்கி 49,569.42 வரை மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு தொடா்ந்து இருந்ததால் 48,698.08 வரை கீழே சென்றது. இறுதியில் 983.58 புள்ளிகளை இழந்து 48,782.36-இல் நிலைபெற்றது.

26 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 4 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. இதில், ஒஎன்ஜிசி 4.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை பெற்றது. சன் பாா்மா, டாக்டா் ரெட்டி ஆகியவை 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. பஜாஜ் ஆட்டோ சிறிதளவே உயா்ந்தது.

எச்டிஎஃப்சி கடும் சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், எச்டிஎஃப்சி 4.38 சதவீதம், எச்டிஎஃப்சி பேங்க் 4.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், எம் அண்ட் எம், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி சுஸுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, டெக் மகிந்திரா, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை 1.50 முதல் 3.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 700 பங்குகள் ஆதாயம் பெற்றன. 996 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 263.80 புள்ளிகள் (1.77 சதவீதம்) குறைந்து 14,631.10-இல் நிலைபெற்றது. காலையில் 14,747.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 14,855.45 வரை உயா்ந்தது. பின்னா், ஒரு கட்டத்தில் 14,601.70 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 38பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பாா்மா குறியீடு மட்டும் 1.23 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துரை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 2.50 முதல் 3 சதவீதமா் வரை வீழ்ச்சி அடைந்தன. எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், ஆட்டோ குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com